ஜப்பானில் நடந்த ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் சீனாவை வீழ்த்தி இந்திய மகளிர் அணியினர் 13 ஆண்டுகளு்ககுபின் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினர்.

இதன் மூலம் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக்கோப்பையில் பங்கேற்கும் வாய்ப்பையும் இந்திய மகளிர் அணியினர் பெற்றுள்ளனர். சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணியினருக்கு பிரதம்ரமோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் கடந்த 2004ம் ஆண்டு ஆசியக் கோப்பைப் போட்டியில் ஜப்பானை 4-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை இந்திய வீராங்கனைகள் பெற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானின் காக்காமிகாரா நகரில் கடந்த ஒரு வாரமாக மகளிருக்கான ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டி நடந்து வந்தது.

இதில் நேற்று நடந்த இறுதி போட்டியில் சீனாவும், இந்தியாவும் பலப்பரிட்சையில் ஈடுபட்டன. தொடக்கத்தில் இருந்தே இரு அணியின் வீராங்கனைகளும் ஆக்ரோஷமாக பந்தை கடத்தினர்.

ஆட்டத்தின் 25-வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை நவ்ஜோத் கவுர் முதல் கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார். இந்த கோலை சீனா 47-வது நிமிடத்தில்தான் சமன் செய்தது. அந்த அணியின் வீராங்கனை டெயின்டென் டுவோ அந்த கோலை அடித்தார். அதன்பின் இந்திய வீராங்கனையின் ஆட்டத்தின் முன் சீன வீராங்கனைகளால் தாக்கு பிடிக்க முடியவில்லை. முடிவில் சீனாவை 5-4 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி கோப்பையை வென்றது இந்திய மகளிர் அணி. இந்தியா சார்பில் ராணி இரு கோலையும், மோனிகா, லிமா மின்ஸ், கவுர் தலா ஒரு கோல் அடித்தனர். 

இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்திய  ஆடவர் அணியும் ஆசிய கோப்பையை வென்று இருந்ததும் குறிப்பிடத்தக்கது.