The grandmother who gave the temple Rs 2.5 lakh to the temple

பிச்சை எடுத்து குருவி சேர்த்தார்போல் சேர்த்த ரூ.2.5 லட்சம் பணத்தை கோயில் புனரமைப்புக்காக 85 வயது மூதாட்டி வழங்கியது அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

கர்நாடக மாநிலம், மைசூரில் உள்ள வொன்டிகோப்பல் பகுதியைச் சேர்ந்தவர் எம்.வி.சீதா லட்சுமி(வயது85). இவர் மைசூரு அரண்மனை அருகே இருக்கும் பிரசன்ன ஆஞ்சநேயர் கோயில் முன் பல ஆண்டுகளாக பிச்சை எடுத்து வருகிறார். வயது மூப்பு காரணமாக எங்கும் செல்லாமல் அங்கேயே இருந்து வருகிறார்.

கோயிலில் கொடுக்கப்படும் பிரசாதங்கள், பழங்கள் பக்தர்கள் அளிக்கும் உணவுகளை சாப்பிட்டு சீதா லட்சுமி தனது காலத்தை ஓட்டி வருகிறார். கோயிலுக்கு வரும் பக்தர்கள் அளிக்கும் பிச்சை பணத்தை சிறிது சிறிதாக சேர்த்து சீதா லட்சுமி சேர்த்த வைத்து வந்தார்.

இந்நிலையில், வருகின்ற ஆஞ்சநேயர் ஜெயந்திக்காக, பிரசன்ன ஆஞ்சநேயர் கோயிலை சீரமைக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கான நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தது. இதை அறிந்த சீதா லட்சுமி கோயிலுக்கு தான் பிச்சை எடுத்து சேர்த்துவைத்து இருந்த பணத்தை அளிக்க முடிவு செய்தார்.

இது தொடர்பாக கோயில் நிர்வாகத்தை அனுகி தனது எண்ணத்தை சீதா லட்சுமி தெரிவித்தார். முதலில் மறுத்த கோயில் நிர்வாகிகள், பின் ஏற்றுக்கொண்டனர். சீதாலட்சமி தான் பிச்சை எடுத்து சேர்த்து வைத்த பணம் ரூ.2.5 லட்சத்தை கோயில் நிர்வாகத்திடம் அளித்து, பக்தர்களுக்கு தேவையான உதவிகளையும், வசதிகளையும் செய்யுங்கள் என தெரிவித்தார்.

இதைக் கண்ட கோயில் நிர்வாகிகள் நெகிழ்ந்துவிட்டனர்.

மூதாட்டி சீதா லட்சுமியின் பெருந்தன்மையான குணத்தையும், நன்கொடை அளித்ததையும் அறிந்தமக்கள் அவரை வாழ்த்தி, அவரிடம் ஆசி பெற்றுச் செல்கின்றனர்.

சீதா லட்சுமியின் சகோதரர் மற்றும் அவரின் மனைவி யாதவகிரி பகுதியில் வசித்தபோதிலும் அவர்களுக்கு தொந்தரவு கொடுக்க மனம் இல்லாமல், கோயிலில் பிச்சை எடுத்து தனியாக வாழ்ந்து வருகிறார்.

இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்து முடிந்த விநாயகர் சதுர்த்தியின்போதும், பக்தர்களுக்கு தேவையான வசதிகளைச் செய்ய ரூ.30 ஆயிரம் நன்கொடையாக சீதா லட்சுமி வழங்கியுள்ளார்.

இந்நிலையில், மூதாட்டி சீதா லட்சுமயின் நிலைமையை அறிந்த கோயில் நிர்வாகத்தினர் அவருக்கு வங்கியில் ஒரு சேமிப்பு கணக்கு தொடங்கி கொடுத்துள்ளனர். தனக்கு பிச்சையில் கிடைக்கும் பணத்தை 2 நாட்களுக்கு ஒரு முறை வங்கியில் சேமித்து வருகிறார்.

இதுகுறித்து சீதா லட்சுமி கூறுகையில், “ எனக்கு பிச்சையில் என்ன கிடைக்கிறதோ அந்த பணத்தை 2 நாட்களுக்கு ஒரு முறை வங்கியில் சேமித்து விடுவேன். என்னைப் பொருத்தவரை வசதியான வீட்டில் பிறந்தபோதிலும், சொந்தக்காரர்கள் ஏமாற்றிவிட்டார்கள். ஆனால், கடவுள் கைவிடவில்லை. என்னைப் பொருத்தவரை கடவுள்தான் எல்லாம்.

எனக்கு வாழ்வு அளிக்கும் இந்த கோயிலுக்கு நான் சேர்த்த பணத்தை புனரமைப்புக்காக வழங்க முடிவு செய்து ரூ.2.5 லட்சத்தை வழங்கினேன். என்னிடம் பணம் இருந்தால், திருடுபோய்விடும் என்பதால், அதை கோயிலுக்கே நன்கொடையாக அளிக்கிறேன். ஒவ்வொரு அனுமன் ஜெயந்தியின்போதும், பக்தர்களுக்கு பரிசாதம் வழங்க வேண்டும் என்பதுதான் ஆசை” எனத் தெரிவித்தார்.

கோயிலின் அறங்காவலர் தலைவர் பசவராஜ் கூறுகையில், “ மூதாட்டி சீதாலட்சுமி மிகவும் வித்தியாசமானவர். யாரிடமும் பிச்சை கொடுங்கள் என்று கேட்டதில்லை. பக்தர்கள் கொடுப்பதை பெற்றுக்கொள்வார். அவர் கோயிலுக்கு பெருந்தன்மையாக நன்கொடை அளித்தது சிறப்பானது. 

அவருக்கு எம்.எல்.ஏ. வாசு பாராட்டு தெரிவித்து, பேனர், பதாகைகள் வைத்தார். கோயில் விழாவின்போது அவர் கவுரவிக்கப்பட்டார். கோயிலில் முன் சீதா லட்சுமியை பாராட்டி பேனர் வைத்தபின், பக்தர்கள் ஏராளமானோர் சீதா லட்சுமிக்கு பிச்சையாக அதிகமான தொகை அளிக்கிறார்கள். சிலர் 100 ரூபாய் அளித்து ஆசி பெற்றுச் செல்வதை பார்க்க முடிகிறது” என்று தெரிவித்தார்.