கர்நாடக மாநிலத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில் அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதம் குறித்து வரும் செவ்வாய்க்கிழமை வரை சபாநாயகர் எந்த முடிவையும் எடுக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதுகுறித்து உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், ‘’எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும்.  கர்நாடக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா கடிதம் மீது சபாநாயகர் முடிவெடுக்கக்கூடாது. வரும் செவ்வாய்க்கிழமை வரை எந்த அவர் எந்த முடிவும் சபாநாயகர் எடுக்கக்கூடாது. அரசியல் சாசன விவகாரம் என்பதால் விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளது. வரும் செவ்வாய்க்கிழமை வரை தகுதி நீக்கம் செய்யக்கூடாது. ராஜினாமா கடிதங்களை ஏற்பது பற்றியோ, நிராகரிப்பது குறித்தோ முடிவெடுக்கக் கூடாது’’ என உத்தரவிட்டுள்ளது. 

அரசியல் காரணங்களுக்காக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா முடிவை எடுத்துள்ளனர் என குமாரசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சபாநாயகர் உத்தரவில் உச்சநீதிமன்றம் தலையிட முடியுமா என்கிற வழக்கு நிலைவையில் உள்ளது. முன்னதாக, கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமாரிடம் அதிருப்தி எம்எல்ஏக்கள் நேற்று மாலை 6 மணிக்குள் சந்தித்து, தேவைப்பட்டால் ராஜினாமா கடிதம் கொடுக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

சபாநாயகர் தனது முடிவை எடுக்க கால வரைமுறை கிடையாது. பொதுவாக சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் அப்படியான உத்தரவிடுவது மரபு அல்ல. சபாநாயகருக்கு சட்டசபை மீது முழு அதிகாரம் உள்ளது. எனவே பொதுவாக அவரது பணிகளில் நீதிமன்றம் தலையிடுவது கிடையாது. சபாநாயகரின் முடிவுகள் சரியா, தவறா என்பது தொடர்பான வழக்குகளில் மட்டுமே நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும். சபாநாயகர் எப்படி செயல்பட வேண்டும் என நீதிமன்றம் வழிகாட்டுவது கிடையாது. எனவே, அரசின் ஆயுட்காலம் நீள்வது தற்போது சபாநாயகர் கையில் உள்ளது.

இருப்பினும் அதிருப்தி எம்.எல்.ஏக்களின் ராஜினாமா குறித்து முடிவெடுப்பதில் அவசரம் வேண்டாம் என சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்து வந்த நிலையில் தற்போது உச்சநீதிமன்றம் செவாய்க்கிழமை வரை எந்த முடிவையும் எடுக்கக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.  இந்நிலையில் கர்நாடாகாவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தால் அசம்பாவிதம் ஏற்படுவதை தடுக்க 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.