The father refused to buy the terrorists body !!! - Complimentary in Parliament

உ.பி.யில் சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதியின் உடலை வாங்க மறுத்த தந்தைக்கு நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பாராட்டு தெரிவித்தார்.

தீவிரவாதி சுட்டுக் கொலை

கடந்த 7-ந்தேதி மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற ரெயில் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து, அதில் தொடர்புடைய சைபுல்லா என்ற தீவிரவாதி உ.பி. தலைநகர் லக்னோவில் நடைபெற்ற ‘என்கவுண்ட்டரி’ல் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அவருக்கு ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இந்த இரு சம்பவங்கள் குறித்தும் மாநிலங்கள் அவையில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நேற்று அறிக்கை தாக்கல் செய்தார்.

ராஜ்நாத்சிங் பாராட்டு

சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதியின் தந்தையான சர்தாஜ் என்பவர், தனது மகனின் உடலை வாங்க மறுத்துவிட்டார். தேச விரோத செயலில் ஈடுபட்ட சைபுல்லா தனது மகனாக இருக்க முடியாத என அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு இருந்தார்.

ராஜ்நாத்சிங் தாக்கல் செய்த அறிக்கையில், ‘‘சர்தாஜ் குறித்து இந்த நாடே மிகவும் பெருமைப்படுவதாக’’ பாராட்டு தெரிவித்து இருக்கிறார்.

இந்தியாவின் கலாசாரம்

‘‘இந்து, கிறிஸ்தவர், அல்லது முஸ்லிம் என யாராக இருந்தாலும், அவர்கள் தீவிரவாதத்தை ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள் என்பதுதான் இந்தியாவின் கலாசாரம் என்பதை இந்த நிகழ்வு நிரூபித்துவிட்டதாக’’ ராஜ்நாத்சிங் கூறியபோது, உறுப்பினர்கள் மேஜையை தட்டி தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொண்டனர்.

திக்விஜய்சிங்

‘‘சர்தாஜின் கருத்து, இந்த தேசத்தின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக’’ பாராட்டிய காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங், ‘‘தீவிரவாதத்தில் சமரசத்துக்கு இடமில்லை’’ என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி பேசும்போது, ‘‘இந்த பிரச்சினையில் அமைச்சர் அறிக்கை தாக்கல் செய்து இருப்பதால், அதில் விளக்கங்களை கோருவதற்கு உறுப்பினர்களை அனுமதிக்க வேண்டும்’’ என கேட்டுக் கொண்டார்.

மேலும் பல எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இந்த கோரிக்கைக்கு ஆதரவு அளித்தனர். அதைத் தொடர்ந்து அவையின் அடுத்த வேலை நாளின்போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு ராஜ்நாத்சிங் பதில் அளிக்க முடிவு செய்யப்பட்டது.

8 பேர் கைது

மத்திய பிரதேச ரெயில் குண்டு வெடிப்பு தொடர்பாக, கடந்த 8-ந்தேதி வரை 6 பேர் கைது செய்யப்பட்டனர். அடுத்த நாள், உத்தரப்பிரதேச தீவிரவாத எதிர்ப்பு படையினரால் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டதாக, ராஜ்நாத்சிங் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

லக்னோவில் நடைபெற்ற என்கவுண்ட்டரில் தீவிரவாதி என சந்தேகிக்கப்படும் சைபுல்லா சுட்டுக்கொல்லப்பட்டதன் மூலம் நாட்டின் பாதுகாப்புக்கு ஏற்பட இருந்த பெரிய அச்சுறுத்தல் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டு இருப்பதாகவும், அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

சைபுல்லா வசித்த இடத்தில் இருந்து 8 கைத்துப்பாக்கிகள், 630 தோட்டாக்கள், 3 மொபைல் போன்கள், 4 சிம் கார்டுகள், இரு ஒயர்லெஸ் செட்கள், ரூ.1.5 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் வெளிநாட்டு பணங்கள் கைப்பற்றப்பட்ட தகவலும், அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.