The Election Commission has issued a notice to Congress leader Rahul Gandhi

குஜராத் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி நேர்காணல் அளித்ததாக கூறி காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரும் 18 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு மொத்தமுள்ள 182 தொகுதிகளில், முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கு சனிக்கிழமை தேர்தல் நடந்து முடிந்தது.

இதில் 66.74 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இரண்டாம் கட்டமாக, 93 தொகுதிகளுக்கு டிசம்பர் 14-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 18-ம் தேதி எண்ணப்படுகிறது.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பாஜகவுக்கும், எதிர்கட்சியான காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோரின் சொந்த மாநிலம் என்பதால் இத்தேர்தல் அக்கட்சியினருக்கு கவுரவப் பிரச்னையாகியுள்ளது.

இதனால், இருகட்சியினரும் இரண்டாம் கட்டத் தேர்தலையொட்டி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்றுடன் மாலையுடன் வாக்கு சேகரிப்பு நேரம் நிறைவடைந்தது. 

ஆனால் ராகுல்காந்தி தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பேட்டி அளித்ததாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து அந்த நிறுவனம் செய்தி ஒளிபரப்பியதற்காக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

மேலும் தொலைக்காட்சிக்கு நேர்காணல் அளித்ததற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரும் 18 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.