the dispute over the name of child judge interesting judgment

நமது கிராமங்களில் பல்வேறு கதைகள் கூறப்படுவதுண்டு. அந்த வகையில், குழந்தைக்கு பெயர் வைப்பது குறித்து சில கதைகளும் உண்டு. அதில் ஒரு கதை. பல ஆண்டுகள் கழித்து பிறந்த குழந்தைக்கு, பெயர் சூட்டுவது குறித்து தாய்க்கும் தந்தைக்கும் இடையே பிரச்சனை எழுந்தபோது, தாய் தனது தகப்பனாரின் பெயரான சிவன் என்ற பெயரை வைக்க வேண்டும் என்றும், குழந்தையின் தந்தையோ தனது தகப்பனாரின் பெயரான கிருஷ்ணன் என்ற பெயரை வைக்க வேண்டும் என்று கூறுவார்கள். 

இது குறித்து அவர்களுக்கிடையே பிரச்சனை அதிகமானபோது, மத்தியஸ்தர் ஒருவரிடம் சென்று நியாயம் கேட்பார்கள். அப்போது அவர், ஓ... இதுதான் பிரச்சனையா? என்று கூறி குழந்தைக்கு சிவராமகிருஷ்ணன் என்று பெயரிடுவார். இதில் மகிழ்ந்த தாய், சிவன் என் அப்பா பெயர், கிருஷ்ணன் கணவரோட அப்பா பெயர்... ராம் யார்? என்று கேள்வி எழுப்பிவார். அதற்கு அந்த மத்தியஸ்தரோ, இது என்னுடைய அப்பா பெயர் என்று கூறுவார். இந்த கதை கிராமத்தில் விளையாட்டாக கூறுவார்கள். 

ஆனால், தற்போதைய காலகட்டத்தில் அதேபோன்ற ஒரு சம்பவம் உயர்நீதிமன்றத்தில் நடந்துள்ளது. கேரளாவில் கணவன் - மனைவியின் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், அவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது. பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பதில் கணவன், மனைவி தரப்புக்குள் பிரச்சனை எழுந்துள்ளது. இதனை அடுத்து அவர்கள் இருவரும் கேரள உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனைவியின் தரப்பினர் குழந்தைக்கு ஜோகன் மணி சச்சின் என்று பெயரிட வேண்டும் என்றனர். ஆனால் கணவன் தரப்பினரோ அபிநவ் சச்சின் என்று பெயரிட வேண்டும என்றனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயசங்கரன் நம்பியார், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தும் வகையில் குழந்தைக்கு ஜோகன் சச்சின் என்று பெயர் சூட்டினார். இரு தரப்பினரையும் திருப்திபடுத்தும் வகையில், மனைவி கூறியதில் ஜோகன் என்ற பெயரையும், கணவன் கூறியதில் சச்சின் என்ற பெயரையும் எடுத்துக் கொண்டு பெயர் வைத்ததாக நீதிபதி தெரிவித்தார். நீதிபதியின் இந்த முடிவுக்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.