வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் இருந்து முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை நீதிமன்றத்தில் ஆஜராவதில் விலக்கு அளிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தின் கெடுபிடி உத்தரவால் ஜெகனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 

தினம் ஒரு அறிவிப்பால் எதிர்க்கட்சிகளை அலறவிட்டுக் கொண்டிருக்கிறார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவைக் கட்டம் கட்டி அடிக்கிறார். தேர்தல் வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றி மக்களின் முதல்வராக வலம் வருகிறார். ஜெகனின் இமேஜ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில், ஆந்திர மாநில முதல்வராக ராஜசேகர ரெட்டி இருந்தபோது அவரது மகன் ஜெகன் மோகன், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இதனையடுத்து, கணக்கில் காட்டப்படாமல் கோடிக்கணக்கில் அவர் சொத்து சேர்த்ததாக குற்றம்சாட்டிய சிபிஐ, 2012-ம் ஆண்டு மே மாதம் அவரை கைது செய்து 16 மாதங்கள் சிறையில் அடைத்தது. 16 மாதங்களுக்கு பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவர் மீதான இந்த சொத்துக்குவிப்பு வழக்கில் சிபிஐ அதிகாரிகள் 11 குற்றப்பத்திரிகைகள் மற்றும் ஒரு துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

ஜெகனும், இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்களும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஐதராபாத் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனர். ஆனால், முதல்வராக பதவியேற்ற பின்னர், நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு கேட்டு ஜெகன்மோகன் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது ஜெகன்மோகனுக்கு நேரில் ஆஜராவதிலிருந்து 10 முறை விலக்கு அளிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டிருப்பவர் எந்தப் பதவியில் இருந்தாலும் சட்டத்துக்கு முன் அவர் சாதாரண மனிதர்தான். எனவே, ஜெகன்மோகன் வரும் 10-ம் தேதி கட்டாயமாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.