ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் உரிமை கோரும் சர்ச்சை நேற்றுடன் முடிவுக்கு வந்தது. பீகார் முதல்-அமைச்சர் நிதிஷ் குமார் அணிக்கு அங்கீகாரம் வழங்கி உள்ள தேர்தல் ஆணையம், கட்சி மற்றும் சின்னத்தை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டு இருக்கிறது.

மகா கூட்டணி

பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலின் போது நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்டவை மகா கூட்டணி அமைத்து வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

அம்மாநில முதல்வராக நிதிஷ் குமார் மீண்டும் பதவியேற்றார். துணை முதல்வராக லாலு மகன் தேஜஸ்வி பொறுப்பேற்றார். அதிக தொகுதிகள் பெற்ற ராஷ்ட்ரீய ஜனதா தளக் கட்சிக்கு அமைச்சரவையில் அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டது.

பா.ஜனதா ஆதரவுடன்

இந்நிலையில், துணை முதல்வர் தேஜஸ்வி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகரித்தது. மேலும் சிபிஐ விசாரணை நடத்தப்பட்டது. எனவே அவரை துணை முதல்வர் பதவியில் இருந்து நிதிஷ் குமார் அதிரடியாக நீக்கினார்.

இதையடுத்து இவ்விரு கட்சிகளுக்கு இடையில் விரிசல் ஏற்பட்டது. நிதிஷ் குமார் திடீரென பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்து ஆட்சியைத் தக்க வைத்தார்.

கட்சியில் பிளவு

இதனால் சொந்தக் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவரான சரத் யாதவுக்கும் நிதீஷுக்கும் இடையே பனிப்போர் துவங்கியது. இதனால் அக்கட்சி இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து செயல்படத் துவங்கியது.

ஆகஸ்ட் 27-ந் தேதி மிகப்பெரிய கூட்டத்தை நடத்திய ஐக்கிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் சரத் யாதவ் நடத்தினார். பின்னர் செப்டம்பர் 17-ந் தேதி டெல்லியில் சிறப்பு செயற்குழுக் கூட்டம் நடத்தி நிதிஷ் குமாரை நீக்குவதாகவும், இதுவே உண்மையான கட்சி என்று பிரகடனம் செய்தார்.

71 எம்.எல்.ஏ.க்கள்

இந்நிலையில், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தரப்பில் தங்கள் தரப்பில் 71 எம்எல்ஏ-க்கள், 30 எம்எல்சி-க்கள், 9 மாநிலங்களை உறுப்பினர்கள் ஆகியோரது ஆதரவு அடங்கிய கடிதத்துடன் தேர்தல் ஆணையத்தில் கட்சி மற்றும் சின்னம் தொடர்பாக மனு அளித்தனர்.

அதுமட்டுமல்லாமல் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக சரத் யாதவின் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை நீக்குமாறு துணைக் குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடுவைச் சந்தித்து கோரிக்கை வைத்தனர். மேலும் அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் நிதிஷ் குமார் அறிவித்தார்.

கட்சியும், சின்னமும் நிதிஷுக்கே

இந்த நிலையில் இரு தரப்பு கோரிக்கைகளையும் பரிசீலித்த தலைமை தேர்தல் ஆணையம், ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ்குமார் தரப்பு அணிதான் உண்மையான கட்சி என அங்கீகாரம் வழங்கியது

ஐக்கிய ஜனதா தளம் பீகாரில் மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டு, கட்சியின் பெயர் மற்றும் அதன் அம்பு சின்னம் ஆகியவற்றை நிதிஷ் அணிக்கே ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

பெரும்பான்மை பலம்

இதற்கான உத்தரவை தலைமை தேர்தல் ஆணையம் நேற்று பிற்பபித்தது.

கட்சியின் சட்டமனற பிரிவிலும், கட்சியின் தேசிய கவுன்சில் (ஐக்கிய ஜனதா தளத்தின் உயர் அதிகார அமைப்பு) அமைப்பிலும் பெரும்பான்மை பலத்தை நிதிஷ் அணியினர் நிரூபித்து இருப்பதாகவும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.