மத்திய அரசுக்கு நெருக்கடி: கறுப்பு ஆடை அணிந்து காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் போராட்டம்
விலைவாசி உயர்வு, வேலையின்மை அதிகரிப்பு, ஜிஎஸ்டி வரி உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த எம்.பி.க்கள் அனைவரும் கறுப்பு ஆடை அணிந்து நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விலைவாசி உயர்வு, வேலையின்மை அதிகரிப்பு, ஜிஎஸ்டி வரி உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த எம்.பி.க்கள் அனைவரும் கறுப்பு ஆடை அணிந்து நாடாளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாட்டில் விலைவாசி உயர்வு, வேலையின்மை அதிகரிப்பு, பணவீக்கம் உயர்வு, அத்தியாவசியப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி உயர்வு ஆகியவைகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றனர்.
விலைவாசி உயர்வு குறித்து இதுவரை விவாதம் ஏதும் நாடாளுமன்றத்தில் நடக்கவில்லை ஆனால், மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் மட்டும் பதில் அளித்துள்ளார்.
இந்நிலையில், விலைவாசி உயர்வு, வேலையின்மை அதிகரிப்பு, பணவீக்கம் உயர்வு, அத்தியாவசியப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி உயர்வுக்கு எதிராக இன்று போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி திட்டமிட்டது.
இதன்படி நாடாளுமன்றத்துக்கு வந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் அனைவரும் கறுப்பு அடை அணிந்து வந்தனர். விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி உயர்வு ஆகியவற்றுக்கு எதிராக நாடாளுமன்றத்தின் வாயிலில் நின்று கோஷமிட்டு போராட்டம் நடத்தினர்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ப.சிதம்பரம், ராகுல் காந்தி உள்ளிட்டோர் கறுப்பு ஆடை அணிந்து நாடாளுமன்றத்துக்கு வந்திருந்தனர். நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் நடத்திய போராட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமை தாங்கினார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதிஅமைச்சருமான ப.சிதம்பரம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் “ விலைவாசி உயர்வு, அக்னிபாத்துக்கு எதிராக இந்தப் போராட்டம். விலைவாசி உயர்வு ஒவ்வொருவரையும் பாதிக்கிறது. மக்களின் குறைகளையும், சுமைகளையும் பார்த்துதான் அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து போராட்டம் நடத்துகிறார்கள்.இதைதான் நாங்களும் செய்கிறோம்” எனத் தெரிவித்தார்.
விலைவாசி உயர்வு, பணவீக்கம், ஜிஎஸ்டி உயர்வு குறித்து காங்கிரஸ் கட்சி தங்களின் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் மத்திய அரசுக்கு பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தையும் நடத்தவிடாமல் எதிர்க்கட்சிகள் முடக்கி வருகிறார்கள். இது ஆளும் அரசுக்கு பெரிய தர்மசங்கடமான சூழலை உருவாக்கியுள்ளது.