கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தரமற்ற மருத்துவ உபகரணங்களை கொடுத்த சீன நிறுவனங்களிடம் இருந்து இனி எந்தப் பொருளும் வாங்கப்படமாட்டாது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது. 

கொரோனா தொற்றை குறுகிய நேரத்தில் கண்டறிய உதவும், ரேபிட் டெஸ்ட் கிட் எனும் பரிசோதனை கருவிகளை, சீனாவிலிருந்து மத்திய அரசு இறக்குமதி செய்தது. 30 லட்சம் ரேபிட் கிட்டுகளை வாங்கிய இந்தியா, அதனை பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பி வைத்தது. ஆனால், அதன் பரிசோதனை முடிவுகளில் துல்லியம் இல்லை என ராஜஸ்தான், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் புகார் அளித்தன. இதனையடுத்து ரேபிட் டெஸ்ட் சோதனையை நிறுத்தி வைக்கும்படி இந்திய மருத்துவ கவுன்சில் உத்தரவிட்டது. 

இதனையடுத்து, பழைய முறையான பிசிஆர் பரிசோதனையை தொடரலாம் என்றும், வாங்கிய ரேபிட் கிட்களை திரும்ப அளிக்க வேண்டும் என்றும் ஐசிஎம்ஆர் மாநிலங்களுக்கு அறிவுறுத்தியது. இந்நிலையில், ஐசிஎம்ஆரின் இந்த முடிவு அதிர்ச்சியளிப்பதாக சீன நிறுவனமான வோண்ட்ஃபோ  தெரிவித்திருந்தது. மேலும், தங்கள் கருவிகளின் தரம் சிறப்பாக இருந்ததாகவும், சூழலுக்கு ஏற்ப அதன் முடிவுகளில் மாற்றம் இருக்கும் என்றும்  கூறியிருந்தது. 

இந்நிலையில், தரமற்ற ரேபிட் கருவிகளை தந்த சீன நிறுவனத்திடம் இனி எந்தப்பொருளும் வாங்கப்படமாட்டாது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்  அறிவித்துள்ளது. கொரோனாவுக்கான பிளாஸ்மா சிகிச்சை முறை சோதனை கட்டத்தில் உள்ளது. கொரோனாவுக்கு பிளாஸ்மா கிசிச்சை பயன்படும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. உரியமுறையில் சிகிச்சை அளிக்காவிட்டால் உயிருக்கு ஆபத்து நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரமற்ற ரேபிட் டெஸ்ட் கிட் கருவிகளை வழங்கியதை அடுத்து மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. மேலும், ரேபிட் டெஸ்ட் கருவிகளும் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தகவல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.