தமிழக அரசு புதிய சட்டத்திருத்தம் கொண்டுவந்து, ஜல்லிக்கட்டு மீதான தடையை முற்றிலும் நீக்கியுள்ள நிலையில், ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டு பிறப்பித்த அரசாணையை திரும்பப்பெறுவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று மனுதாக்கல் செய்துள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரப் பெருமைகளின் அடையாளமான "ஜல்லிக்கட்டு" நிகழ்ச்சியை நடத்த ஏதுவாக, மத்திய அரசு உடனடியாக அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும் என, தமிழகம் முழுவதும் போராடங்கள் நடைபெற்றன.

இதனையடுத்த முதலமைச்சர் ஓபிஎஸ் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து, மத்திய அரசின் பல்வேறு துறைகளின் ஒப்புதல் பெற்று தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்க நடவடிக்கை மேற்கொண்டார்.
மேலும் தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 7-ம் தேதி ஜல்லிக்கட்டு தொடர்பாக கொண்டுவந்த அரசாணையை திரும்பப்பெறுவதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணை வரும் 31ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
