நாட்டில் குழந்தைகளை தற்கொலைக்கு தூண்டும், நீல திமிங்கலம்(புளூ வேர்ல்) விளையாட்டை நீக்காவிட்டால் சமூக ஊடகங்களான பேஸ்புக், கூகுள், யாகூ உள்ளிட்ட நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு எச்சரிக்கை செய்துள்ளது.

நீல திமிங்கலம் விளையாட்டு என்பது, ஆன்-லைன் மூலம் விளையாடப்படும் விளையாட்டும். இந்த விளையாட்டில் சேர்பவர்களுக்கு 50 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இலக்கு வழங்கப்படும் . அந்த இலக்கை அடைய வேண்டும்.

முதலில் சிறிய இலக்காகவும் நாட்கள் செல்ல செல்ல கடினமான இலக்கு தரப்படும். இறுதியாக 50-வது நாளில் விளையாட்டில் பங்கேற்போர் தற்கொலை செய்து கொண்டு, அந்த புகைப்படத்தை பகிர வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கும்.

இந்த விளையாட்டில், மும்பையைச் சேர்ந்த 13 வயது சிறுவனும், கேரளாவைச் சேர்ந்த இளைஞரும் கடந்த வாரம்  தற்கொலை செய்து கொண்டனர். மேலும், இந்தூரில் இதேபோல 14 வயது சிறுவனும் பள்ளிக்கூடத்தின் 3-வது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்ய முயன்றபோது தடுக்கப்பட்டான். நாளுக்கு நாள் இதேபோல் சம்பவங்கள் நடக்கத் தொடங்கியுள்ளதால், இந்த நீல திமிங்கலம் விளையாட்டை தடை செய்ய கோரிக்கை வலுத்தது.

இதையடுத்து கடந்த 11-ந்தேதி மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் நீல தமிங்கலம் விளையாட்டுக்கு தடை விதித்து உத்தரவுபிறப்பித்துள்ளது.

இந்நிலையில் நீல தமிங்கலம் விளையாட்டு குறித்து மத்திய தகவல் தொடர்புத் துறை ரவி சங்கர் பிரசாத் டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது-

இணையதளங்களில் வலம் வரும் நீலத் திமிங்கல விளையாட்டால் இளைஞர்கள் தற்கொலை செய்யும் நிகழ்வுகள் நடந்து வருகின்றன என்று எங்களுக்க புகார்கள் வருகின்றன. இது தொடர்பாக சமூக ஊடங்களுக்கும், தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டு, அந்த விளையாட்டுக்கு இணைப்பு கொடுக்கும் தளத்தை நீக்கக் கோரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேஸ்புக், கூகுள், யாகூ, உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் கடிதம் அனுப்பி தெளிவான வரையறைகள் விதித்துள்ளோம். இதுபோன்ற விளையாட்டுக்களை இந்திய தகவல்தொழில் நுட்பத் துறை ஊக்கப்படுத்தவில்லை.இளம் சிறார்கள் தற்கொலை செய்யும் நிகழ்வுகளை ஏற்றுக்கொள்ளமுடியாது.

ஆதலால், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அளித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளுக்கு கட்டுப்பட்டு அனைத்து சமூக ஊடகங்களும் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இதில் ஏதேனும் விதிமுறைகள் இருந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் பொது நல வழக்கு....

இளம் சிறார்களையும், இளைஞர்களையும் தற்கொலைக்கு தூண்டும் இந்த நீலத் திமிங்கல விளையாட்டை தடை செய்யக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் குர்மீத் சிங் என்பவர் இந்த பொதுநல மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி கீதா மிட்டல், நீதிபதி சி ஹரி சங்கர் முன் இன்று விசாரணைக்கு வருகிறது.

முதல்வர் பினராயி விஜயன் வரவேற்பு

இளைஞர்களையும், சிறுவர்களையும் தற்கொலை செய்யத்தூண்டு நீலத்திமிங்கல விளையாட்டை மத்தியஅரசு தடை செய்ததை கேரள முதல்வர்  பினராயி விஜயன் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது- நீலத்திமிங்கல விளையாட்டை மாநிலத்தில் யாரும் விளையாடாமல் அரசு போதுமான நடவடிக்கை எடுக்கும். இதற்காக கேரள சைபர் போலீசார், சைபர்டோம் போலீசார் தீவிரமாக செயல்படுவார்கள். இந்த ஆபத்தான விளையாட்டை மத்திய அரசு தடை செய்துள்ளதை நான் வரவேற்கிறேன் எனத் தெரிவித்தார்.