மத்திய அரசின் முக்கிய துறைகளில் இயக்குநர், இணை இயக்குநர், கூடுதல் இயக்குநர் உள்ளிட்ட சில முக்கிய பதவிகளில் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த திறமையான ஊழியர்களை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்து பணிகளை தொடங்கிவிட்டது.

முதல்கட்டமாக ‘ஆயுஷ் அமைச்சகத்திலும், குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகத்திலும் தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக பிரதமர் மோடியிடம், மத்திய பணியாளர் துறை அமைச்சகத்தின் முறைப்படியான அறிக்கையை சமீபத்தில் அளித்துள்ளது.

தற்போது மத்திய அரசில் 48 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இதில் 2015, மார்ச் 1-ந் தேதி நிலவரப்படி 4.2 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த பணியிடங்களில் முக்கிய பதவிகளில் தனியார் துறையைச் சேர்ந்த சிறப்பு வல்லுநர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. நிதி ஆயோக் அளித்த ஆலோசனையின் அடிப்படையில் மத்திய அரசு இந்ததிட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

தனியார் துறைகளில் இருந்து நியமிக்கப்படும் அதிகாரிகளுக்கு குறிப்பட்ட அளவு கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணி வழங்கப்படும். இதன் மூலம் அந்த அதிகாரிகள் அரசின் நிர்வாகத்தை சிறப்பாகவும், திறமையாகவும் கொண்டு செல்ல உதவுவார்கள் என்று அரசு நம்புகிறது.

இது குறித்து மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “இன்றைய நிலையில், குழப்பான பொருளாதார சூழலுக்கு மத்தியில் கொள்கைகளை வகுப்பு என்பது மிக சிறப்பு வாய்ந்த செயல். ஆதலால் மத்திய அரசின் மிக முக்கியத்துறைகளில், முக்கிய பதவிகளில் தனியார் துறையைச் சேர்ந்த 50 நிபுணர்களை நியமிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. அவர்கள் இயக்குநர், இணை செயலாளர் அந்தஸ்தில் நியமிக்கப்படுவார்கள். இந்தப் பதவிகளில் தற்போது ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்ளனர்.

ஒப்பந்த அடிப்படையில் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை நிர்ணயிக்கப்படும்.

மத்திய அரசின் ஆயுஷ் துறையின் சிறப்பு செயலாளராக பிரபல ஆயுர்வேத மருத்துவர் வைத்யா ராஜேஷ் கோடாய்சா கடந்த மாதம் பொறுப்பேற்றார். பெரும்பாலும் இந்தப் பதவிக்கு ஐஏஎஸ் அதிகாரியே நியமிக்கப் படுவார். முதல் முறையாத தனியார் ஆயுர்வேத மருத்துவரிடம் பொறுப்புஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கடந்த ஆண்டு மத்திய குடிநீர் மற்றும் தூய்மைத் துறையின் செயலாள ராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிபரமேஸ்வரன் அய்யர் நியமிக்கப்பட்டார். அவர் 2 ஆண்டு கள் ஒப்பந்த அடிப்படையில் இப்பணியை ஏற்றுள்ளார்’’ எனத் தெரிவித்தார்.