’உங்களுக்கு அதிகாரத்திற்கான பசி... பா.ஜனதா தலைவர் எடியூரப்பாவை கர்நாடக சட்டமன்ற சபாநாயகர் ரமேஷ்குமார் கடுமையாக சாடியுள்ளார்.

கர்நாடக சட்டசபையில் அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை முதல்வர் குமாரசாமி நேற்று தாக்கல் செய்தார். அந்த தீர்மானத்தின் மீது காரசார விவாதம் நடைபெற்றது. இதற்கிடையே ஓட்டெடுப்பை உடனே நடத்த கவர்னர் பரிந்துரைத்ததால் சபையில் கடும் அமளி ஏற்பட்டது. இதனால் சபையை நாள் முழுவதும் சபாநாயகர் ஒத்திவைத்தார். சபை இன்று மீண்டும் கூடியது.

மதியம் 1.30 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க கர்நாடக முதல்வர் குமாரசாமிக்கு ஆளுநர் வலியுறுத்தி இருந்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி கர்நாடக ஆளுநர் விடுத்த காலக்கெடு நிறைவு பெற்றதைத் தொடர்ந்து வாதங்கள் நடைபெற்றது. இன்னும் 20 உறுப்பினர்கள், தீர்மானத்தின் மீது பேச இருப்பதால், திங்கள்கிழமை வரை விவாதம் தொடரும் கூறப்பட்டு உள்ளது.

விவாதம் முடிந்த பிறகே குரல் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று சபாநாயகர் திட்டவட்டமாக அறிவித்தார். விவாதம் முடியாமல் வாக்கெடுப்பு நடத்த முடியாது என்று சபாநாயகர் கூறினார். ஒத்திவைக்கப்பட்ட கர்நாடக சட்டப்பேரவை  மீண்டும் 3 மணிக்கு கூடியது. கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 6 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என முதல்வர் குமாரசாமிக்கு கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா மீண்டும் கெடு விதித்து உள்ளார். 

1:30 மணிக்கு அவை கூடியபோது எடியூரப்பா உடனடியாக தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்றார். அப்போது பதிலளித்த சபாநாயகர் ரமேஷ் குமார், ’’எங்களுடைய விதிகளின்படி விவாதம் முடியாமல் எதுவும் நடக்கப்போவது கிடையாது. உங்களுக்கு பசி, ஆனால் அது சாத்தியம் கிடையாது’’ எனக் காட்டமாக கூறியுள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து ஓட்டெடுப்பு நடத்தப்படும். சட்டசபை எப்படி நடக்க வேண்டும் என்பது தொடர்பாக ஆளுநர் உத்தரவிட முடியாது என அம்மாநில அமைச்சர் கிருஷ்ணா பைரேகவுடா கூறியுள்ளார்.