Asianet News TamilAsianet News Tamil

கர்நாடக சட்டசபை தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் பிரசாரம் - உதவியை நாட பா.ஜனதா கட்சி திட்டம் 

The BJP party is planning to ask actor Rajini Gandhi to campaign for his party in Karnataka assembly elections.
The BJP party is planning to ask actor Rajini Gandhi to campaign for his party in Karnataka assembly elections.
Author
First Published Jan 1, 2018, 9:32 PM IST


கர்நாடக சட்டசபைத் தேர்தலில் நடிகர் ரஜினி காந்தை தங்கள் கட்சிக்கு பிரசாரம் செய்யக் கேட்டுக்கொள்ள பா.ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் பிரவேசம்

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா?, வரமாட்டாரா? என்ற நீண்ட கால கேள்விக்கு நேற்றுமுன்தினம் அவரே பதில் அளித்தார். “தான் அரசியலுக்கு வருவதாகவும், 2021 சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப் போவதாகவும்’’ நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார். தனது நடவடிக்கையை வலுப்படுத்தும் நோக்கில், நேற்று இணையதளத்தையும் ரஜினி காந்த் தொடங்கினார்.

நட்புறவு

இந்நிலையில், நடிகர் ரஜினி காந்தும், பா.ஜனதா கட்சியும் இயல்பாகவே நட்புறவுடன் இருந்து வருகிறார்கள். முன்னாள் பிரதமர் வாஜ்பாய்காலத்தில் இருந்து, தற்போதுள்ள பிரதமர் மோடி வரை அனைவரும்  ரஜினிக்கு நெருக்கமாகவே இருந்து வருகின்றனர்.

தேர்தலில் பிரசாரம்

நடிகர் ரஜினி காந்துக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் ஆதரவையும், புகழையும் பா.ஜனதா கட்சி கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பயன்படுத்தி வெற்றியை அறுவடை செய்ய திட்டமிட்டுள்ளது. கர்நாடக மாநில பா.ஜனதா கட்சித் தலைவர்கள் பலர் சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தில் தங்களுக்கு ஆதரவாக ரஜினி காந்தை பிரசாரம் செய்ய வைக்கும் திட்டத்துடன் அவரை அனுக முடிவு செய்துள்ளனர்.

மகிழ்ச்சி

இது குறித்து கர்நாடக மூத்த தலைவரும், தமிழக பா.ஜனதா ஒருங்கிணைப்பாளருமான சி. ரவி கூறுகையில், “ நடிகர் ரஜினி காந்துடன் இணைந்து செயலாற்றுவதில் பா.ஜனதா கட்சி எப்போதும் மகிழ்ச்சி கொள்கிறது. அவருக்கு அனைத்து விதத்திலும் பா.ஜனதா ஆதரவு அளித்து வருகிறது. அரசியலில் தீண்டாமையை நாங்கள் பின்பற்றுவதில்லை, நம்பிக்கையுடன் வரும் யாவரும் வரவேற்கப்படுகிறார்கள்’’ எனத் தெரிவித்தார்.

மாற்று அரசியல்

தமிழகத்தில் இதுவரை கடவுள் மறுப்பு கொள்கையில் தீவிரம் கொண்ட திராவிடக் கட்சிகளும் ஆட்சி செய்து வந்த நிலையில், அதற்கு மாற்றாக ஆன்மீக அரசியலை முன்னெடுப்பேன் என நடிகர் ரஜினி காந்த் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

சோதனை முயற்சி

தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடக்க இன்னும் 4 ஆண்டுகள் வரை இருக்கும் நிலையில், தனது பிரசாரம் மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு எடுபடும் என்பதை கண்டறிய வரும் மே மாதம் நடக்கும் கர்நாடக சட்டசபைத் தேர்தலில் நடிகர் ரஜினி காந்த் பா.ஜனதாவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வாய்ப்பு உள்ளது என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

பா.ஜனதாவுக்கு வலு

இது குறித்து தமிழக பா.ஜனதா மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறுகையில், “ நடிகர் ரஜினி காந்தின் ஆன்மீக அரசியல் என்ற கொள்கை பா.ஜனதாவின் சித்தாந்தத்தோடு ஒத்துப்போகிறது. தமிழகத்தில் நாத்திக அரசியலில் இருந்து, மாற்றம் வருவது அவசியம். அதற்கு மாற்றாக மதநம்பிக்கைகள் கொண்ட அரசியல்வர வேண்டும். ரஜினியின் வருகை எங்களின் இயக்கத்துக்கு வலுசேர்க்கும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவுக்கு சேவை செய்வார்

நடிகர் ரஜினியின் சகோதரர் சத்திய நாராயணா ராவ் கெய்க்வாட் பெங்களூரு நகரில் வசித்துவருகிறார். அவர் அளித்த பேட்டியில் கறுகையில், “ என் சகோதரர் ரஜினி காந்த் தான் பிறந்த, வளர்ந்த மாநிலமான கர்நாடகாவுக்கு எப்போதும் சேவை செய்ய விரும்புவார். கர்நாடக மாநிலத்தில் பிறந்து, வளர்ந்து, பஸ் கண்டக்டராக பணி செய்து, இந்த நிலைக்கு உயர்ந்தவர். அவரின் பிறந்த மண்ணுக்கு அவர் செய்வது என்பது கனவாகும். தமிழகத்தில் தீவிர அரசியலில் அவர் இறங்கிவிட்ட நிலையில், இரு மாநிலங்களுக்கும் சேவை செய்ய முடியும்.

கட்சியின் பெயர் எப்போது?

நடிகர் ரஜினி காந்த் தைத்திருநாள் அன்று தனது கட்சியின் பெயரை வெளியிடுவார் என நினைக்கிறேன். ஆனால், கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவாக அவர் பிரசாரம் செய்வாரா என்பதை இப்போது கூறுவது கடினம். இப்போதுதான் அவர் அரசியல் பிரவேசத்தை அறிவித்துள்ளார். பொறுத்து இருந்து பார்க்கலாம். கர்நாடக தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருக்கிறது. முதலில் கிராமங்களில் உள்ள தங்களின் அமைப்பை வலுப்படுத்தும் பணிகளில் முன்னுரிமை கொடுத்து ரஜினி செயல்படுவார்’’ எனத் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios