The big check for sand and stone is stretched - the action of Aditya
உத்தரப்பிரதேசத்தில் உள்ள மணல் குவாரிகள், கல் குவாரிகள், கிரனைட் குவாரிகள் அனைத்தையும் இனி இ-டெண்டர் மூலமே ஏலம் விட வேண்டும், நேரடியாக ஏலம் விடக்கூடாது, சட்டவிரோத குவாரிகள் அனைத்தையும் மூட வேண்டும் என்று முதல்வர் ஆதித்யநாத் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்
மாநிலத்தின் இயற்கை வளங்களை கொள்ளையடிப்பது தடுக்கப்படும், ஊழல் ஒழிக்கப்படும் என்ற நோக்கில் இந்த நடவடிக்கையை முதல்வர் ஆதித்யநாத் எடுத்துள்ளார். இது தொடர்பாக அதிகாரிகளுடன் நேற்றுமுன்தினம் இரவு முழுவதும் ஆலோசனை நடத்திய ஆத்தியநாத், அடுத்த 20 நாட்களுக்குள் இதுகுறித்த முழுமையாக செயல்திட்டத்தை தயாரித்து தாக்கல் செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அது மட்டுமல்லாமல், சுரங்கத்துறை தனியாகச் செயல்படாமல், போலீசார், மாவட்ட நிர்வாகம் ஆகியோருடன் இணைந்து செயல்பட்டு, சட்டவிரோத, அங்கீகாரம் இல்லாத குவாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இனிவரும் காலங்களில் அனைத்து ஏலங்களும் இ-டெண்டர் மூலமே நடக்க வேண்டும், நேரடியாக யாரும் ஏலத்தில் கலந்துகொள்ளக்கூடாது. வருவாய் இழப்பு வரக்கூடாது என்று கண்டிப்புடன் அதிகாரிகளுக்கு முதல்வர் ஆதித்யநாத் ஆலோசனைகள் கூறியுள்ளார்.
மேலும், பிரதமர் மோடி மேக் இன் இந்தியா பிரசாரத்தை முன்னெடுப்பது போல், “ மேக் இன் உ.பி.” பரிசாரத்தை ஆதித்யநாத் முன்னெடுக்க உள்ளார். முதலீட்டாளர்களை உத்தரப்பிரதேசத்தில் ஈர்க்கும் வகையில், இந்த பிரசாரம் அமைய இருக்கிறது.
இது குறித்து விரிவான திட்டம் தயாரிக்கவும், போலி நிதிநிறுவனங்கள் வருவதை தடுக்கும் வகையில் செயல்திட்டம் உருவாக்க அதிகாரிகளுக்கு ஆதித்யநாத் கட்டளையி்ட்டுள்ளார்.
மாநிலத்தில் உள்ள 12 லட்சம் ஓய்வூதியதாரர்கள் நலனுக்காக, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட, டிஜிட்டல் லைப் சான்றிதழ்களையும் வழங்கி, ஓய்வூதியத்தை நேரடியாக வங்கக்கணக்கில் செலுத்தவும் ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
எஸ்.சி. எஸ்.டி. பிரிவினருக்கு ஆண்டுக்கு வங்கியில் கொடுக்க வேண்டிய கடன் அளவு, வேலைவாய்ப்புக்கான கடன்கள் போன்றவைகள் மிகவும் மந்தமாக நடக்கிறது என்ற புகார்கள் குறித்து முதல்வர் ஆதித்யநாத் அதிகாரிகளிடம் மிகுந்த வேதனை தெரிவித்தார். இதில் உள்ள பிரச்சினைகளை களைந்து அந்த பிரிவினரின் பொருளாதார முன்னேற்றத்துக்கும், வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கும் உரிய பணிகளைச்செய்ய அதிகாரிகளுக்கு அவர் ஆணையிட்டுள்ளார்.
