உத்தரப்பிரதேச மாநில உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் மருமகளுக்கு இடம் வழங்க பாரதிய ஜனதா கட்சி மறுத்துள்ளதை அடுத்து, அவர் சுயேச்சையாக போட்டியிடுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநில உள்ளாட்சி தேர்தல் வரும் 22, 26 மற்றும் 29 தேதிகளில் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்குமாறு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் மருமகள் முறை கொண்ட தீபா கோவிந்த் பாரதிய ஜனதா கட்சியில் விண்ணப்பித்திருந்தார். கான்பூரில் நகராட்சித் தலைவர் பதவிக்கு வேட்பாளராக தேர்வு செய்யுமாறு அவர் கேட்டிருந்தார்.

சுயேச்சையாக போட்டி

ஆனால் பாரதிய ஜனதா கட்சி அவருக்கு சீட் வழங்க மறுத்துவிட்டது. இதனையடுத்து அவர் கான்பூர் நகராட்சித் தலைவர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

சுயேச்சையாக போட்டியிடுவதை தவிர்க்கவேண்டும் என தீபாவிடம் பாரதிய ஜனதா கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கான்பூர் நகராட்சித் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக சரோஜினி தேவி அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து ஜனாதிபதியின் மருமகள் தீபா சுயேச்சையாக போட்டியிடுகிறார் . பாஜ.க.வில் தனக்கு போட்டியிட வாய்ப்பு மறுத்ததை அடுத்து அவர் இந்த அதிரடி முடிவுக்கு வந்துள்ளதால் உத்தரப்பிரதேச அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.