The attack took place yesterday in the state of Maharashtra
மகாராஷ்டிராவில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் மீது நேற்று அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக ராஜ் தாக்கரே தலைமையிலான எம்.என்.எஸ். கட்சி உறுப்பினர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் மராத்தியர்களுக்கே என்ற கொள்கையை முன்னிறுத்திய சிவசேனா கட்சி அம்மாநிலத்தில் மாபெரும் வளர்ச்சியை கண்டுள்ளது. தற்போது பாஜகவுடன் அக்கட்சி கூட்டணி ஆட்சியை நடத்தி வருகிறது. சிவசேனா கட்சியை பால் தாக்கரே நிறுவினார். அவரது இளைய சகோதரர் ஸ்ரீகாந்த் தாக்கரேவின் மகன்தான் ராஜ் தாக்கரே. இவர் கடந்த 2006-ல் கட்சியில் இருந்து பிரிந்து மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா (எம்.என்.எஸ்.) என்ற புதுக்கட்சியை தொடங்கினார்.
இதன்பின்னர் கடந்த 2008-ல் பீகார், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக எம்.என்.எஸ். கட்சியினர் கைது செய்யப்பட்டனர். ராஜ் தாக்கரேவும், மகாராஷ்டிர மாநிலம் மராத்தியர்களுக்கே என்ற கொள்கையை தீவிரமாக கடைபிடித்தார்.
இதற்கிடையே குப்வாத் மாவட்டத்தில் மாநில தொழில் வளர்ச்சி குழுமத்தின் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் அவர்கள் மீது நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக போலீசில் அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து எம்.என்.எஸ். கட்சியினர் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது, இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 323 (வேண்டுமென்றே காயம் ஏற்படுத்தும் நோக்கத்தில் தாக்குதல்), 341 (சட்டவிரோத தடுப்பு), 504 (அமைதியை சீர்குலைத்தல்), 34 (பொது நோக்கத்தோடு சிலர் குற்றச் செயலில் ஈடுபடுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
