கிராமபுற மக்களுக்கும் சிறந்த மருத்துவம் அளிப்பதே அரசின் நோக்கம் - முதல்வர் பேச்சு
புதுச்சேரி மாநிலத்தில் கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கும் சிறந்த மருத்துவ சேவை வழங்குவதே அரசின் நோக்கம் என்று அம்மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் மருத்துவர்கள் மாநாடு மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு மாநாட்டு மலரை வெளியிட்டார். இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
மாநாட்டில் முதல்வர் ரங்கசாமி பேசுகையில், 50 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட பகுதியில் தான் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். ஆனால் பத்தாயிரம் மக்கள் தொகை உள்ள இடத்தில் புதுச்சேரியில் சுகாதார மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மருத்துவம் படிக்கும் மாணவர்களும் கிராமப்புறத்தில் பணி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும் கிராமப்புறத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கும் தரமான மருத்துவம் அளிக்க வேண்டும் என்பதுதான் நமது அரசின் எண்ணம். உலகத்தரம் வாய்ந்த அரசு மருத்துவமனைகளை புதுச்சேரியில் உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என்றார்.
நிகழ்ச்சியில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கே. எஸ். பி. ரமேஷ் மற்றும் மருத்துவர்கள் மருத்துவ மாணவ, மாணவிகள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.