The Accidental Prime Minister First Look Anupam Khers Uncanny Resemblance with Manmohan Singh is Hard to Ignore

சிங் இஸ் கிங் என்று படமெடுத்த பாலிவுட் சினிமாவுலகம், மீண்டும் ஒருமுறை அதனை உண்மையாக்கி இருக்கிறது. 'மன்மோகன்சிங் இப்போ என்ன பண்றார்னு தெரியலையே' என்று புலம்பும் ஆட்களுக்காகவே ஒரு நற்செய்தியை தந்திருக்கிறது. அட, ஆமாங்க ஆமாம்! முன்னாள் பிரதமர் சிங்கின் வாழ்க்கை விரைவில் திரைப்படமாகவிருக்கிறது. 

காங்கிரசை சேர்ந்த மன்மோகன் சிங், தனது எளிமைக்கும் பணிவுக்கும் பேர் பெற்றவர். பஞ்சாபி மாநிலத்தை சேர்ந்த பொருளாதார வல்லுனரான இவர், அஸ்ஸாம் மாநில ராஜ்யசபா உறுப்பினர். இதனாலேயே, நாடாளுமன்றத்தின் பின்பக்கம் வழியாக நுழைந்து பிரதமர் ஆனவர் என்ற விமர்சனங்களுக்கு ஆளானவர். அப்படிப்பட்டவரின் இமேஜ், பின்னாளில் அவரது அரசியல் முடிவுகளுக்காக கிண்டல்களில் முற்றிலுமாக மூழ்கடிக்கப்பட்டது காலத்தின் விளையாட்டுகளில் ஒன்று. செயல்படாத பிரதமர் என்றே, தேர்தல் பிரச்சாரத்தின்போது அவரை நேரடியாக விமர்சித்தவர் பிரதமர் நரேந்திர மோடி. 

கடந்த 2004 ம் ஆண்டு, இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்றார் மன்மோகன் சிங். அப்போது அவரது ஆலோசகராகப் பணியாற்றியவர் சஞ்சயா பாரு. 2008 ம் ஆண்டு வரை சிங்குடன் இருந்தவர், அதன்பின் பிரதமரின் அலுவலகத்தில் இருந்து விலகினார். அதன்பின், அவ்வப்போது சிங்கின் மனசாட்சியாக அவருடன் உரையாடியவர். அதனால் வந்தது தான் அந்த வினை. 

கடந்த 2014 ம் ஆண்டு மே மாதம் வரை, இந்திய பிரதமர் அலுவலகம் எப்படி இயங்கியது, அமைச்சரவை சகாக்கள் பிரதமர் சிங்குக்கு கட்டுப்பட்டு நடந்தார்களா? ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியின் பெருமைகள் யாரை சென்றடைந்தன? அதன் தோல்விகள் யாரை பாதித்தன என்பது பற்றிய சிங்கின் பார்வைகளை விளக்கி தி ஆக்சிடெண்டல் பிரைம்மினிஸ்டர்' என்ற நூலை எழுதினார் சஞ்சயா பாரு. 

காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உட்பட பலரை அப்பட்டமாக விமர்ச்சித்த இந்த நூல், கடந்த 2014 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக வெளியானது. இந்த நூலை அடிப்படையாக வைத்து, காங்கிரஸ் கட்சியை நோக்கி கேள்விகளை அடுக்கினர் பா.ஜ.க.வினர். ஒருவிதத்தில், காங்கிரஸ் கட்சியின் இமேஜ் அதல பாதாளத்தில் விழ காரணமாக இருந்தது இந்த 'ஆக்சிடென்டல் பிரைம்மினிஸ்டர்'. 

இந்த புத்தகத்தை அடிப்படையாக வைத்து உருவாகும் இந்தி சினிமாவில், சிங்காக நடிக்கப் போகிறார் நடிகர் அனுபம் கேர். நாடறிந்த நடிகரான இவருக்கு, தனி அறிமுகம் தேவையில்லை. வி.ஐ.பி. படத்தில் பிரபுதேவாவின் மாமனாராக வருவார்; அதாவது, சிம்ரனின் அப்பாவாக வருவாரே, அவரே தான்! திரைக்கதை, நடிகர்கள் தேர்வு முடிந்து அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கிறது இத்திரைப்படம்! ஆனாலும் சோனியா காந்தி, ராகுல் காந்தி வேடங்களில் நடிப்பவர் பற்றி இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

அனுபம் கேர் இதுபற்றி அறிவித்த உடனேயே, வழக்கம்போல சில சர்ச்சைகளும் பற்றத் தொடங்கிவிட்டன. 'அதிகார மையம் இரண்டு இடங்களில் இருந்தால் பிரச்னை தான்' என்ற சிங்கின் வருத்தமான மனநிலையே, இந்த புத்தகத்தின் அடிநாதம். எனவே, இப்படம் வெளியானால் சிங்கின் மீது கரிசனம் கூடும் என்பதைவிட, அவரை சுற்றியிருந்தவர்கள் மீது கறைகள் அதிமாகும் என்பது உறுதி. அதனால், காங்கிரஸ் கட்சிக்கு பல விதத்தில் இந்த திரைப்படம் இடையூறாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம், இந்த படம் 2018 ம் ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதனாலென்ன என்கிறீர்களா? 2019 மே மாதம் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறும் என்பது இப்போது வரை உறுதியான ஒரு தகவல். 

ஆப்பு நல்லா வைக்குறாங்கப்பா!