The 12th G20 conference of the world leaders in Germany
ஜெர்மனியின் துறைமுக நகரான ஹம்பர்கில் உலகத் தலைவர்கள் சங்கமிக்கும் 12-வது ஜி.20 மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டின் இடையே பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களைச் சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
அதே சமயம், முதலாளித்துவ நாடுகளின் மாநாடு என்று கூறி பல்வேறு அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார், கண்ணீர்புகை குண்டுகள் மூலமும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும், இருக்கரம் கொண்டு அடக்கினர்.
1999-ல் ஜி-20 அமைப்பு உருவாக்கப்பட்டது. அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, சவுதிஅரேபியா, மெக்ஸிகோ, ஜப்பான், இத்தாலி, இந்தோனேசியா, இந்தியா, பிரான்ஸ், சீனா, கனடா, பிரேசில், ஆஸ்திரேலியா, துருக்கி, தென்ஆப்பிரிக்கா, அர்ஜென்டியா, இந்தோனேசியா, ஜப்பான், தென் கொரியா மெக்சிக்கோ நாடுகள் ஜி 20 அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக இஸ்ரேல் சென்றார். அந்தபயணத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து 12-வது ஜி20 மாநாடு நடக்கும் ஜெர்மன் நாட்டுக்குநேற்று முன் தினம் மாலை சென்றார். அங்கு அவருக்கு மிகச்சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜி.20 மாநாட்டில் ‘நிலையான வளர்ச்சியில் சர்வதேச வளர்ச்சி மற்றும் வர்த்தகம், பருவநிலை மாறுபாடு மற்றும் எரிசக்தி’ என்ற தலைப்பில் பிரதமர் மோடி பேச உள்ளார்.
இந்த மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பேச்சுக்களை உற்றுநோக்கவும், உலக அரங்கில் கொண்டு சேர்க்கவும் 67 நாடுகளைச் சேர்ந்த 4,800 பத்திரிகையாளர்கள் சங்கமித்துள்ளனர்.
இந்நிலையில், 12-வது ஜி-20 மாநாடு வழக்கமான உற்சாகத்துடன் ஹம்பர்க் நகரில் நேற்று தொடங்கியது. ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்ல் ஜி20க்கு வருகை தந்த உலகத் தலைவர்களை வரவேற்றார்.
2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், தீவிரவாதத்தை உலக நாடுகள் எதிர்ப்பது, பருவநிலை மாறுபாடு, தடையில்லா உலக வர்த்தகம் , அகதிகள் சிக்கல், நிலையான வளர்ச்சி, சர்வதேச நிலைத்தன்மை, தடையில்லா வர்த்தகம் ஆகியவை குறித்து முக்கியமாக உலக தலைவர்கள் விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பருவநிலை மாறுபாடு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முழக்கமிட்டார், இது போல் பல்வேறு தலைவர்களுக்கு இடையே வேறுபாடுகள் இருந்தபோதிலும், அதை மறந்து இந்த மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்ள இருக்கின்றனர்.
இந்த மாநாட்டில் ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், துருக்கி அதிபர் ரெசிப் எர்டோகன்,பிரான் அதிபர் இமானுவேல் மெக்ரான், இங்கிலாந்து பிரதமர் தெரசா மேஉள்ளிட்டோர் அனைவரின் கவனத்தையும் ஈர்க்க உள்ளனர்.
இந்த மாநாடு தொடங்குவதற்கு முன் பிரதமர் மோடி நிருபர்களிடம் பேசுகையில், “ உலகில் உள்ள முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்க ஜி20 நாடுகள் தலைவர்கள் கூடியிருக்கிறார்கள். பொருளாதார வளர்ச்சி, நிலையான மேம்பாடு, அமைதி, நிலைத்தன்மை குறித்து பேசப்பட உள்ளது. கடந்த ஆண்டு ஹாங்சு மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் எந்த அளவு நடைமுறைப்படுத்தி இருக்கிறோம் என்பதை உலகத் தலைவர்கள் ஆய்வு செய்ய வேண்டும்’’ என்றார்.
இது குறித்து வௌியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் கோபால் பாகலே கூறுகையில், “ பிரதமர் மோடி ஜி.20 மாநாட்டின் இடையே அர்ஜென்டினா, கனடா, இத்தாலி, ஜப்பான், மெக்சிக்கோ, கொரியா, இங்கிலாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேச உள்ளார்’’ எனத் தெரிவித்தார்.
