10 நிமிடத்தில் 1000 பேருக்கு மேல் பலி! ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த நாள் இன்று
1919ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் ஜாலியான் வாலாபாக் திடலில் திரண்ட கூட்டத்தை நோக்கி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஆயிரம் பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
1919ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி இந்திய வரலாற்றில் மறக்க முடியாத நாளாக உள்ளது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள ஜாலியன் என்ற இடத்தில் பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி டையர் தலைமையில் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற நாள் இது. சுமார் 10 நிமிடங்கள் நடத்தப்பட்ட இந்தத் துப்பாக்கிச் இச்சூட்டு 1650 குண்டுகள் சுடப்பட்டன. இதில் ஆயிரம் பேருக்கு மேல் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்திய மக்களிடையே பெருகிய சுதந்திரத்துக்கான எழுச்சியை நசுக்க பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் 1919ஆம் ஆண்டு ரௌலட் சட்டத்தைக் கொண்டுவந்தனர். ஊடகங்களைக் கட்டுப்படுத்தவும் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கைது செய்து விசாரணையின்றி சிறைகளில் அடைக்கவும் காவல்துறையினருக்கு அதிகாரம் வழங்கும் இந்தச் சட்டத்துக்கு கடுமையான எதிர்ப்பு வந்தது.
பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக ஊர்வலங்களும் பொதுக்கூட்டங்களும் அதிகரித்தன. 1919ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி பஞ்சாப் மக்களின் அறுவடைத் திருநாளான வைசாகி தினத்தில் ஜாலியான் வாலாபாக் திடலில் மாபெரும் கூட்டம் திரண்டது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் கூடி இருந்தனர்.
அப்போது ராணுவ ஜெனரல் டையர் 100 பிரிட்டிஷ் படையினரையும், 50 இந்திய சிப்பாய்களையும் அங்கு வரவழைத்தார். கூடியிருந்த மக்களுக்கு எந்த எச்சரிக்கையும் கொடுக்காமல் கூட்டத்தை நோக்கிச் சுடுமாறு வீரர்களுக்கு உத்தரவிட்டார்.
ஜாலியன் வாலாபாக் திடலில் ஒரே ஒரு வாசல் மட்டுமே இருந்தது. துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்ப மக்கள் அந்த வாயிலை நோக்கி ஓடினர். கூட்ட நெரிசலால் சிலர் சுவர் ஏறிக் குதித்து தப்ப முயன்றினர். இன்னும் சிலர் திடலின் நடுவில் இருந்த கிணற்றில் குதித்தனர். கிணற்றில் வீழுந்து இறந்தவர்களின் எண்ணிக்கையே 120.
பிரிட்டிஷ் அரசு இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 379 பேர் கொல்லப்பட்டதாகக் கூறியது. ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்ததால் குண்டுக்காயம் பட்டவர்கள் பலர் எங்கும் செல்ல முடியாமல் காலை வரை அங்கேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் இந்தத் துப்பாக்கிச்சூடு பற்றி இந்திய தரப்பில் நடத்தபட்ட விசாரணையில் ஆயிரம் பேருக்கு மேல் படுகொலை செய்யப்பட்டது தெரிந்தது.
1919 ஆகஸ்ட் 25 அன்று ஜெனரல் டையர் மேலதிகாரிகளுக்குச் சமர்ப்பித்த வாக்குமூலத்தில்,” நான் அங்கு போனது வெறுமே கூட்டத்தை கலைக்க மாத்திரமல்ல. மக்களின் நெஞ்சிலே ஒரு குலைநடுக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றுதான் போனேன். அங்கு கூடினவர்கள் நெஞ்சில் மட்டுமல்ல, பஞ்சாப் முழுதுவம் எல்லோருக்கும் குலைநடுக்கம் ஏற்பட வேண்டும் என்றுதான் சுட்டுக்கொண்டே இருந்தேன்” என்று கூறியிருக்கிறார்.
ஈவு இரக்கம் இல்லாமல் ஆயிரம் பேரைக் கொன்ற ஜெனரல் டயருக்கு தண்டனை வழங்கவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்ற நிலையில், அவர் இந்தியாவை விட்டு வெளியேறி லண்டனுக்குச் சென்றார். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட டயர் மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு 1927 ஜூலை மாதம் 23ஆம் தேதி இறந்தார்.
1951ஆம் ஆண்டு படுகொலை நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் மைதானம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவிடமாக அறிவிக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் படுகொலையின் நூற்றாண்டு நினைவை முன்னிட்டு மைதானத்தில் உள்ள நினைவிடம் புனரமைப்பு செய்யப்பட்டது. அப்போது பிரிட்டன் ராணியாக இருந்த ராணி எலிசபெத் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்காக பிரிட்டிஷ் அரசாங்கம் சார்பில் வருத்தம் தெரிவித்தார்.