சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி  மேகாலயா உயர்நிதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார், தனது இட மாற்றத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கொலீஜியத்துக்கு வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அவரது கோரிக்கையை கொலீஜியம் நிராகரித்தது. இதையடுத்து அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார். இதனிடையே  தலைமை நீதிபதி தஹில் ரமானியின் இடமாற்றத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே தலைமை நீதிபதி தஹில் ரமானி  இடமாற்றம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு விளக்கம் அளித்துள்ளது. முழுமையாக பரிசீலித்து நீதிபதிகள் குழு ஒருமனதாக எடுத்த முடிவின் படி தலைமை நீதிபதி மாற்றப்பட்டுள்ளார். வேறு சில மாநில நீதிபதிகள் மாற்றமும் உச்சநீதிமன்ற கொலீஜியம் (நீதிபதிகள் குழு) இதுபோல் முடிவு செய்துள்ளது. சிறப்பான நீதி நிர்வாகத்தை கருத்தில் கொண்டு சில மாற்றங்களை நீதிபதிகள் குழு மேற்கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் நீதிபதிகள் இடமாற்றத்துக்கு காரணத்தை கூறுவது நீதித்துறை நலனுக்கு உகந்தது அல்ல. ஆனால் அவசியம் ஏற்பட்டால் இடமாற்றத்துக்கான காரணத்தை நீதிபதிகள் குழு தெரிவிக்க தயங்காது என்று ஐகோர்ட் தலைமை நீதிபதி தஹில் ரமானி இடமாற்றம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு விளக்கமளித்துள்ளது.

இந்நிலையில், கொலிஜியத்தின் முடிவை தலைமை நீதிபதி தஹில் ரமணி மதிக்க வேண்டும் என்று இந்திய பார் கவுன்சில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.