ஜம்மு-காஷ்மீரில் இன்று ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் மீண்டும் துப்பாக்‍கிச்சூடு நடத்தினர். இந்திய ராணுவத்தினர் நடத்திய பதிலடி தாக்‍குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்‍கொல்லப்பட்டனர். எல்லையில் தீவிரவாதிகள் மேற்கொண்ட ஊடுருவல் முயற்சி முறியடிக்‍கப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜம்மு-காஷ்மீரில், உரி ராணுவ தலைமையக தாக்‍குதல் சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தான் ஆதரவுடன் தீவிரவாதிகள் பதில் தாக்‍குதல் நடத்தலாம் என தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து, நாடு முழுவதும் கடலோரப் பகுதிகள் உட்பட முக்‍கிய இடங்களில் உஷார்நிலை பிறப்பிக்‍கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் Handwara பகுதியில் உள்ள Langate ராணுவ முகாம் அருகே இன்று அதிகாலை 5 மணியளவில் தீவிரவாதிகள் துப்பாக்‍கிச்சூடு நடத்தினர். இதற்கு, இந்திய ராணுவத்தினரும் பதிலடி கொடுத்தனர். 20 நிமிடங்கள் வரை துப்பாக்‍கிச் சண்டை நீடித்ததாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையை ராணுவத்தினர் முடுக்‍கிவிட்ட நிலையில், மீண்டும் அதே பகுதியில் காலை 6.30 மணியளவில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ராணுவத்தினர் நடத்திய பதில் தாக்‍குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்‍கொல்லப்பட்டனர். ராணுவ முகாமை குறி வைத்து தீவிரவாதிகள் அடுத்தடுத்து துப்பாக்‍கிச்சூடு நடத்தியுள்ளதால் மீண்டும் பதற்றம் நிலவுகிறது.

இதனிடையே, இந்தியாவில் தாக்‍குதல் நடத்த எல்லைக்‍கட்டுப்பாட்டு கோடு வழியாக ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளின் 

சதித்திட்டம் முறியடிக்‍கப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.