​ஜம்மு காஷ்மீர் போலீஸ் தேடுதல் வேட்டையில் பெற்ற தாயின் உருக்கமான பேச்சையும், பாசத்துக்கு கட்டுப்பட்டும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி மனம் மாறி போலீசிடம் சரண் அடைந்துள்ளார். 

பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் இந்த சம்பவம் குறித்துக் கூறுகையில், 

காஷ்மீரின் தெற்குப்பகுதி, சோப்பூரில் ஒருவீட்டுக்குள் லஷ்கர் இ தொய்பா அமைப்பு தீவிரவாதி பதுங்கியிருக்கிறார் என போலீசாருக்கும், பாதுகாப்பு படையினருக்கும் ரகசிய தகவல் கிடைத்து. இதையடுத்து, வியாழக்கிழமை இரவு அந்த வீட்டை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். 

அந்த தீவிரவாதி குறித்து விசாரணை நடத்தியதில், அந்த வீட்டுக்குள் பதுங்கியிருப்பவர் பெயர் உமாக் காலிக் மிர் என்ற ஷமீர்(வயது 26) என்பதைக் கண்டுபிடித்தோம். இவர் இந்த ஆண்டு தன் வீட்டில் இருந்து காணாமல் போய் தீவிரவாத இயக்கத்தில் இணைந்தவர் என்பதை கண்டுபிடித்தோம். இந்த தீவிரவாதியின் குடும்பத்தினர் சோப்பூர் நகரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள துஜார் கிராமத்தில் வசித்து வந்தனர். 

உடனடியாக அந்த குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, தீவிரவாதியை உயிருடன் சரணடைய பேச்சு நடத்தும்படி கேட்டுக்கொண்டோம். இல்லாவிட்டால், துப்பாக்கிசூடு நடத்துவதைத் தவிர வேறுவழியில்லை என்பதையும் தெரிவித்தோம். 

இதை ஏற்று அந்த தீவிரவாதியின் தாய், பாதுகாப்பு அதிகாரிகளுடன் வந்தார். அந்த தீவிரவாதி பதுங்கி இருக்கும் வீட்டுக்குள் மிக துணிச்சலாக அந்த தாய் சென்றார். 

உள்ளே இருக்கும் தீவிரவாதி இந்த சூழலை பயன்படுத்தி தப்பினாலோ, அல்லது வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினாலோ நிலைமை மோசமாகும் என எண்ணி நாங்கள் பயந்தோம். ஆனால், அந்த தாய், தனது மகனின் பெயரைக் கூறிக்கொண்டே அந்த வீட்டுக்குள் சென்றார். 

தனது மகனிடம் தான் வந்திருக்கிறேன் என் விவரத்தை தெரிவித்த தாயை தீவிரவாதி அனுமதித்தான். அதன்பின் நீண்டநேரம் தீவிரவாதி ஷமீரிடம் பேச்சு நடத்திய அவனின் தாய், அவரை சரணடைய சம்மதிக்க வைத்தார். 

வீட்டைவிட்டு வெளியே வந்த அந்த தீவிரவாதி ஏ.கே. 47 துப்பாக்கி, தோட்டாக்கள், வெடிகுண்டுகளை போலீசிடம் ஒப்படைத்து சரணடைந்தார். 

பாதுகாப்பு படையினரைப் பொருத்தவரை மனித உயிர் மிகவும் விலைமதிப்பானது என்பதை உணர்ந்தவர்கள் அதனால், அந்த தீவிரவாதியின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்து வரவழைத்தோம். தாய்ப்பாசத்தின் முன் கட்டுப்பட்ட அந்த இளைஞர், தாயின் வார்த்தைக்கு மதிப்புகொடுத்து சரண் அடைந்தார் என்று தெரிவித்தார்.