ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவத்தினர் 3 பேர் வீர மரணம் அடைந்தனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

பாக். மறைமுக போர்

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது அத்து மீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்தியா தரப்பில் கடும் பதிலடி கொடுக்கப்படுகிறது. இருப்பினும், அந்நாடு தனது அத்துமீறலை நிறுத்திக் கொள்ளவில்லை. அத்துடன் காஷ்மீர் தீவிரவாதிகளை ஊக்கப்படுத்தி இந்தியா மீது தாக்குதல் நடத்தும் நடவடிக்கையில் பாகிஸ்தான் ஈடுபடுகிறது. மேலும், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத குழுக்களை அந்நாடு தூண்டிவிட்டு இந்தியா மீது மறைமுக போரை பாகிஸ்தான் நடத்துகிறது.

ராணுவ முகாம்

ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள பன்ஸ்காம் என்ற இடத்தில் ராணுவ முகாம் உள்ளது. இதனை குறிவைத்து தீவிரவாதிகள் 2 பேர் நேற்று அதிகாலை 4 மணிக்கு தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இந்திய ராணுவத்தினர் பதிலடியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த சண்டையின் முடிவில் ராணுவத்தினர் 3 பேர் உயிரிழந்தனர். இவர்களில் ராணுவ அதிகாரி கேப்டன். ஆயுஷ் என்பவரும் ஒருவர். உயிரிழந்த மற்ற 2 வீரர்கள் குறித்த விவரம் உடனடியாக தெரியவரவில்லை.

5 வீரர்கள் காயம்

காயம் அடைந்த 5 வீரர்கள் ஹெலிகாப்டர் மூலமாக உடனடியாக கொண்டு செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ராணுவத்தினர் நடத்திய பதிலடியில் தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தீவிரவாதிகள் எவரேனும் முகாமுக்கு அருகே வந்துள்ளனரா என்பது குறித்து ராணுவத்தினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.