காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் வந்த வாகனம் மீது தீவிரவாதிகள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தியதில் 3 வீரர்கள் உள்ளிட்ட 4 பேர் கொல்லப்பட்டனர்.
கண்காணிப்பு
சோபியான் மாவட்டத்தில் உள்ள சிட்டார்கிராம் பகுதிக்கு நேற்று ஒரு வாகனத்தில் 44 ஆர்.ஆர். பட்டாலியன் பிரிவைச் சேர்ந்த 8 துணை ராணுவ படை வீரர்கள் வழக்கமான கண்காணிப்பு மற்றும் சோதனைக்கு சென்றனர்.
துப்பாக்கிசூடு
அப்போது, சாலை ஓரம் ஒரு பள்ளத்தில் மறைந்து இருந்த தீவிரவாதிகள் திடீரென ராணுவ வீரர்கள் வந்த வாகனம் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.
3 பேர் பலி
இதில் வாகனத்தில் இருந்த ராணுவ வீரர்களில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். லெப்டினென்ட் முகேஷ் ஜா, மேஜர் அமர்தீப் உள்ளிட்ட 5 பேர் காயமடைந்தனர்.
மேலும், துப்பாக்கி சூடு நடந்த போது சாலையில் சென்ற ஜனாபேகம் என்ற பெண் மீது குண்டு பாய்ந்தது. இதில் அந்த பெண் உயிரிழந்தார்.
பொறுப்பேற்பு
இது குறித்து மத்திய ரிசர்வ் படையின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், “ஜினாதுல் இஸ்லாம் தலைமையிலான லஷ்கர் இ தொய்பா அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்,
மேலும், சில குழுக்கள் இந்த தாக்குதலுக்கு உதவியிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். காயம் அடைந்த வீரர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தப்பி உள்ளனர். இந்த தாக்குதலையடுத்து, இப்பகுதியில் கூடுதல் பாதுகாப்புபடையினர் குவிக்கப்பட்டுள்ளனர்'' என்றார்.
