கடந்த 2014 ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்டு புதிய மாநிலமாக உருவாக்கப்பட்டது. அப்போது ஆந்திராவின் தலைநகராக இருந்த ஹைதராபாத், 10 ஆண்டுகளுக்கு இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக இருக்கும் என்றும் அதன்பிறகு அது தெலுங்கானா வசம் சென்று விடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்குள்ளாக தனக்கான புதிய தலைநகரை ஆந்திரா உருவாக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

தலைநகராக விளங்கிய ஹைதராபாத் தெலுங்கானாவிற்கு கொடுக்கப்பட்டாலும் திருப்பதி, காளஹஸ்தி, ஸ்ரீசைலம் போன்ற புகழ் பெற்ற கோவில்கள் ஆந்திராவிலேயே தொடரும் என்று அறிவிக்கப்பட்டது. இவை அனைத்துமே செல்வவளம் மிகுந்த கோவில்கள். இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் குவியும் இடம்.

இதனால் தெலுங்கானாவிலும் புகழ்பெற்ற பிரம்மாண்ட கோவில்களை உருவாக்க சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு முடிவு செய்தது. அதன்படி, 2014 ம் ஆண்டு, யாதகிரிகுட்டாபில் உள்ள லக்ஷ்மி நரசிம்மர் கோவிலை புனரமைக்க பணிகள் தொடங்கின.

சுமார் 1800 கோடியில் பிரம்மாண்டமுறையில் புவனகிரி மாவட்டத்தில் இருக்கும் மலையில் 'புதிய திருப்பதியாக' இந்த கோவில் கட்டப்பட்டு வருகிறது. திருப்பதியை போன்றே ஏழு கோபுரங்கள் அமைக்கப்பட்டு மிகப்பெரிய அளவில் உருவாக்கப்படுகிறது.

தமிழகத்தின் மகாபலிபுரத்தைச்  சேர்ந்த 500 சிற்பிகள் ஆகம விதிப்படி இந்த கோவிலை கட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 5 ஆண்டுகளாக கட்டப்பட்டு வரும் நிலையில், விரைவில் அனைத்து பணிகளையும் முடித்து குடமுழுக்கு நடந்த முதல்வர் சந்திரசேகர ராவ் திட்டமிட்டுள்ளார்.

ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நிலைத்து நிற்கும் வகையில் கட்டப்பட்டு வரும் இக்கோவில், திருப்பதியை போன்றே செல்வம் கொழிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.