தெலுங்குதேசம் கட்சியை பாஜகவுடன் இணைத்தால் பயன்பெறலாம் என தெலுங்கு தேசம் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கூறியிருப்பது சந்திரபாபு நாயுடுவை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. 

நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் தெலுங்கு தேசம் கட்சி பெரும் தோல்வியடைந்தது. ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்றார். அவர் ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், தெலுங்குதேசம் கட்சியை சேர்ந்த 4 ராஜ்யசபா எம்.பி.,க்கள் பா.ஜ.,வுக்கு தாவி விட்டனர். இந்நிலையில் தெலுங்குதேசம் கட்சியின் முன்னாள் எம்.பி., ஜே.சி.திவாகர் ரெட்டி, முன்னாள் எம்.எல்.ஏ., பிரபாகர் ரெட்டி ஆகியோர் ''அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை. எதிரிகளும் இல்லை. எனவே, தெலுங்குதேசம் கட்சியை பா.ஜ.,வுடன் இணைத்து விடவேண்டும்.

ஏனெனில், நரேந்திர மோடியின் அனுபவமும், முதிர்ச்சியான கருத்துகளும் சந்திரபாபு நாயுடுவுக்கு தேவைப்படுகிறது'' எனக் கூறி உள்ளனர். இந்தப்பேச்சு ஆந்திராவில் பெரும் பரபரப்பாகி உள்ளது. இது குறித்து தெலுங்குதேசம் கட்சியில் விசாரித்தால், ''அவர்கள் இருவரும் பா.ஜ.,வில் ஐக்கியமாக முடிவெடுத்துவிட்டனர். அதனால் அப்படிப் பேசுகின்றனர். மோடி பிரதமராகக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர் சந்திரசேகரராவ்'' என்கின்றனர்.