தெலங்கானாவில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் 48,000 பேரை ஒரே நாளில் பணி நீக்கம் செய்து முதல்வர் சந்திரசேகரராவ் உத்தரவிட்டுள்ளார். இதனால், அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

தெலங்கானாவில் 2-வது முறையாக சந்திரசேகரராவ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தெலங்கானா போக்குவரத்து கழகத்தை சேர்ந்தவர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும்  என்பது, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 50,000 போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 2-வது நாளாக நீடித்த வேலைநிறுத்தத்தால், பண்டிகை நாட்களில் சொந்த ஊர் திரும்ப முடியாமல் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். 

இந்நிலையில், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அரசு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இதனையடுத்து, 6 மணிக்குள் பணிக்கு வராத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டிருந்தார். ஆனாலும், ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை கைவிடவில்லை. மேலும், இதுபோன்ற மிரட்டலுக்கு அரசு அடிபணியாது எனவும் தெரிவித்திருந்தனர். 

இதனையடுத்து, மீண்டும் முதல்வர் சந்திரசேகர் உயர் அதிகாரிகளுடன் நேற்று அவசர ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட 48,000 பேரை நீக்க முதல்வர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் நிலைமையை சமாளிக்க அரசு பேருந்துகளை லீசுக்கு விடுவது என்றும், 4000 தனியார் பேருந்துகளை கூடுதல் அனுமதியும் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.