தெலங்கானா அருகே ஆட்டோ மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 14 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  

தெலங்கானாவின் மெட்ஜல் மண்டலம் கொத்தபல்லி கிராமத்தை சேர்ந்த தொழிலாளர்கள் 18 பேர் கூலி வேலைக்காக ஆட்டோவில் சென்றனர். பின்னர், வேலை முடித்து வீட்டு ஒரே ஆட்டோவில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, எதிரே அதிவேகமாக வந்த லாரி ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில், ஆட்டோவில் பயணம் செய்த கூலித்தொழிலாளர்கள் சாலையில் தூக்கி வீசப்பட்டு உடல் நசுங்கி 14 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர். 

இந்த விபத்தை பார்த்த அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த 4 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்தவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இதனையடுத்து விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.