Telangana must boost power output in state K Chandrasekhar Rao

விவசாயிகளுக்கு 24 மணிநேர இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை ஒரு வாரத்துக்கு சோதனை முயற்சியாக தெலங்கானா அரசு நேற்று தொடங்கியது. ஆனால், இந்த திட்டம் முறைப்படி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க உள்ளது.

கனவு திட்டம்

இது குறித்து முதல்வர் சந்திரசேகர் ராவ் கூறுகையில், “ மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு தற்போது நாள்தோறும் 9 மணி நேரம் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், எனது கனவான விவசாயிகளுக்கு தடையின்றி, 24 மணிநேரமும் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் விரைவில் நனவாகப்போகிறது.

இது தொடர்பாக மின்துறை இயக்குநர். பிரபாகர் ராவுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன். 2018ம் நிதியாண்டு, மார்ச் மாதத்தில் இருந்து விவசாயிகளுக்கு 24 மணிநேரம் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் தொடங்கும்’’ என்று தெரிவித்தார்.

சோதனை முயற்சி

மின்துறை இயக்குநர் பிரபாகர் ராவ் கூறுகையில், “ மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு 24 மணிநேர மின்சார வழங்கும் திட்டம், திங்கள்கிழமை இரவு முதல் ஒரு வாரத்துக்கு சோதனை முயற்சியாக நடைமுறைப்படுத்தப்படும்.

தீவிர கண்காணிப்பு

அனைத்து மாவட்டங்கள், துணை மின்நிலையங்கள், மண்டலங்கள் அனைத்திலும் டிரான்பார்மர்வாரியாக ஒவ்வொரு நிமிடமும் அடுத்த ஒரு வாரத்துக்கு தீவிரமாக கண்காணிக்கப்படும். இந்த சோதனை முயற்சியில் கிடைக்கும் அறிக்கையின் அடிப்படையில், நிரந்தரமாக இலவச மின்சாரம் எப்படி கொடுக்க முடியும் என்பது குறித்து ஆய்வு செய்வோம்.

24 மணிநேரம்

சில மாநிலங்கள் விவசாயிகளுக்கு இலவசமின்சாரம் கொடுக்கின்றன, ஆனால், தெலங்கானாஅரசு 24 மணிநேரமும் இலவச மின்சாரம் கொடுக்க உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ. 12 ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. சோதனை முயற்சியாக இதற்கு முன் மேடக், கரீம்நகர்,நல்கொண்டா மாவட்டங்களில் சோதனை முயற்சியாக செயல்படுத்தப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.

23 லட்சம் பம்பு செட்

தெலங்கானா மாநிலத்தில் தற்போது 23 லட்சம் பம்பு செட்கள் உள்ளன, அதில் 9.58 லட்சம் பம்புசெட்கள் மட்டும் 3 மாவட்டங்களில் இருக்கின்றன. இதில் 43 சதவீத பம்பு செட்கள் இயங்க மட்டும் 9,500 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும். இலவச மின்சாரம் அளிக்கப்படும் கூடுதலாக 23 லட்சம் பம்பு செட்கள் இயக்கப்படலாம், இதனால், கூடுதலாக 2 ஆயிரம் மெகாவாட் தேவைப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.