கொரோனாவை தட்டித்தூக்கிய தாய் பாசம்...ஊரடங்கில் சிக்கித் தவித்த மகனுக்காக ஸ்கூட்டரில் 1400 கி.மீ. பயணித்த தாய்!
மூன்று நாட்களில் சுமார் 1,400 கிலோ மீட்டர் வரை ஸ்கூட்டரில் பயணம் செய்து தனது மகனை பத்திரமாக அழைத்து வந்த ரஜியாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
உலகில் தாய் பாசத்தை விட உயர்வானது ஏதுமில்லை என்று சொல்லி கேட்டிருப்போம். சிறு கோழியும் தன் குஞ்சுகளை தூக்க வரும் பருத்திற்கு எதிராக சீறிக்கொண்டு நிற்பதை பார்த்திருப்போம். இவை அனைத்தையும் விட தாயின் பாசம் எதையும் ஜெயித்து காட்டும் என்பதை நிரூபித்துள்ளார் சிங்கப்பெண் ஒருவர்.
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் உள்ள போதா நகரைச் சேர்ந்தவர் ரஜியா பேகம் (48). 15 வருடங்களுக்கு முன்பு கணவரை பறிகொடுத்த ரெஜியாவுக்கு 2 மகன்கள் தான் உலகம். முதல் மகன் பொறியியல் பட்டதாரி, இரண்டாவது மகன் மருத்துவ நுழைவுத்தேர்வில் வெற்றி பெற முயன்று வருகிறார். அரசு பள்ளி தலைமை ஆசிரியரான ரஜியா பேகம் தனியொருவராக இரண்டு மகன்களையும் நல்ல நிலைக்கு கொண்டு வர முயன்றுவருகிறார்.
ரஜியாவின் 19 வயது இளைய மகன் நிஜாமுதீனின் நண்பர் தந்தைக்கு உடல் நலக்குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதை கேள்விப்பட்ட இருவரும் ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகேயுள்ள ரஹ்மதாபாத் என்ற ஊருக்கு சென்றுள்ளனர். அப்போது தான் இந்தியாவிற்குள் நுழைந்த கொரோனா எனும் அரக்கன் தனது கோர முகத்தை காட்ட தொடங்கியிருந்தது.
காட்டுத்தீ போல் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வந்த தனது இளைய மகனை தாமே களம் இறங்கி மீட்பது என்ற முடிவுக்கு வந்தார் ரஜியா.
இதையும் படிங்க: மீண்டும் சட்டை பட்டனை கழட்டி போஸ்... கொரோனா ரணகளத்திலும் கிளு,கிளுப்பு காட்டும் ரம்யா பாண்டியன்...!
அப்பகுதி காவல்துறை துணை ஆணையரிடம் நிலைமையை எடுத்துக்கூறிய ரஜியா, அனுமதி கடிதத்துடன் மகனை மீட்பதற்காக ஸ்கூட்டரில் பயணத்தை தொடங்கினார். கடந்த திங்கள் கிழமை பயணத்தை தொடங்கிய ரஜியா, இரவு, பகல் பாராமல் நீண்ட பயணம் மேற்கொண்டு, மறுநாள் மகன் இருக்கும் ஊரை அடைந்தார்.
இதையும் படிங்க: உஷார்... இஎம்ஐ சலுகையை வைத்து புதுவித மோசடி... வாடிக்கையாளர்களை எச்சரிக்கும் வங்கிகள்...!
அங்கிருந்து மகனை அழைத்துக்கொண்டு கிளம்பிய ரஜியா, சிறிதும் ஓய்வின்றி மீண்டும் ஸ்கூட்டர் பயணத்தை தொடங்கினார். மறுநாள் காலை அதாவது புதன்கிழமை மகனுடன் சொந்த ஊர் வந்து சேர்ந்தார். மூன்று நாட்களில் சுமார் 1,400 கிலோ மீட்டர் வரை ஸ்கூட்டரில் பயணம் செய்து தனது மகனை பத்திரமாக அழைத்து வந்த ரஜியாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.