தெலுங்கானாவில் பெற்றோர் எதிர்ப்பால் தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்ற காதல் ஜோடிகளுக்கு மருத்துவர் உதவியால் மருத்துவமனையிலேயே திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

தெலுங்கானா மாநிலம், விகாராபாத் பகுதியை சேர்ந்தவர் நவாஸ்(21). தனது உறவுக்காரப் பெண்ணான ரேஷ்மா(19) என்பவரை நவாஸ் காதலித்து வந்துள்ளார். ஆனால் இந்த காதலுக்கு இரண்டு குடும்பத்தினர் தரப்பில் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதனால் மனமுடைந்த ரேஷ்மா பூச்சி மருத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் ரேஷ்மா அனுமதிக்கப்பட்டார். இந்த தகவலை அறிந்த காதலன் நவாசும் பூச்சி மருந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ரேஷ்மா அனுமதிக்கப்பட்ட அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரும் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இரு வீட்டாரின் பெற்றொர்களும் இவர்களது காதலுக்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, அந்த மருத்துவமனையில் மூக்கில் சுவாசக் குழாயுடன் இருந்த ரேஷ்மாவுக்கு  மணமகள் அலங்காரம் செய்யப்பட்டது. நடக்க முடியாமல் சிகிச்சை பெற்றுவந்த நவாஸ் மணமகன் கோலத்தில் சக்கர நாற்காலியில் அழைத்து வரப்பட்டார். இருவீட்டார் முன்னிலையில் மருத்துவமனையிலேயே திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.