இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை 2 லட்சத்து 47 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று காலை 8 மணி முதல் இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 9,971 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரத்தில் 287 பேர் உயிரிழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 6,950ஆக அதிகரித்துள்ளது.

உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா 6வது இடத்தில் உள்ளது. கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ள நாடுகளில், ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக இந்தியாவில் தான் இறப்பு விகிதம் குறைவு. ஆனாலும் இந்தியாவில் இறப்பு எண்ணிக்கை குறையாமல், அதிகரித்துவருவது வருத்தமளிக்கிறது. 

தென்னிந்தியாவில் கொரோனா வைரஸின் வீரியம் குறைவாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொரோனா உறுதியாகும் நிறைய பேருக்கு அறிகுறிகள் இருப்பதில்லை. அறிகுறிகளே தென்படாத அளவிற்குத்தான் கொரோனாவின் வீரியம் உள்ளது. ஆனாலும் கொரோனா கண்டறியப்படும் பலர், ஓரிரு நாட்களில் உயிரிழக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. 

ஹைதராபாத்தை மையமாகக் கொண்டு செயல்படும் தெலுங்கு செய்தி சேனல் டிவி5-ல் குற்றப்பிரிவு ஊடகவியலாளராக பணிபுரிந்த 30 வயதான மனோஜ் குமார் என்பவர் கொரோனா கண்டறியப்பட்ட ஒரே நாளில் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

மனோஜ் குமாருக்கு கொரோனா அறிகுறிகள் தெரிந்ததையடுத்து, அவர் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு தொற்று உறுதியான ஒரே நாளில் அவர் உயிரிழந்துவிட்டார். சுவாச வழித்தட தசை உட்பட அனைத்து தசைகளும் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துள்ளார். மனோஜ்குமார் பைலேட்ரல் நிமோனியாவுடனான கொரோனாவால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவருக்கு ஏற்கனவே தைமஸ் சுரப்பி அறுவை சிகிச்சை செய்து தைமஸ் சுரப்பி அகற்றப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் காவல்துறையினர், ஊடகவியலாளர்கள் ஆகியோர் களத்தில் இறங்கி பணியாற்றிவருகின்றனர். இந்நிலையில், கொரோனா உறுதியான ஒரே நாளில் ஊடகவியலாளர் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.