the public and private establishments and institutions in Telangana should display their organisations names in Telugu on their signboards

தெலங்கானாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தெலுங்கு மொழி கட்டாயம் கற்பிக்கப்பட வேண்டும் என்று தெலங்கானா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது-

மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவ, மாணவர்களுக்கு தெலுங்கு மொழிப் பாடம் கட்டாயம் இடம் பெற வேண்டும்.

தெலங்கு மொழியை கட்டாயப் பாடமாக கற்பிக்கும் கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரமும், அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அனுமதியும் அளிக்கப்படும். அதேசமயம், உருது மொழியை மாணவர்கள் விருப்ப பாடமாக எடுத்து படிக்கலாம்.

அதுமட்டுமல்லாமல் அனைத்து தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள், கல்வி நிலையங்கள் அனைத்தும் தங்களின் பெயர் பலகைகளில் தெலங்கு மொழியையே பயன்படுத்தப்பட வேண்டும்.அதேசமயம், தெலுங்கு மொழியோடு சேர்த்து மற்ற மொழிகளையும் எழுதலாம். இந்த இரு விஷயங்களுக்கும் அமைச்சரவையில் முதல்வர் ஒப்புதல் பெற்றுள்ளார்.

மேலும், தொடக்ககல்வி பயிலும் மாணவர்களுக்கு தெலுங்கு மொழிக்கான பாடத்திட்டத்தை தயாரிக்கவும் சாகித்ய அகாடெமிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சாகித்ய அகாடெமி முடிவு செய்யும் பாடப்பிரிவுகள் அனைத்து பள்ளிகளிலும் கற்பிக்கப்படும். பாடங்கள் விரைவாக தொகுக்கப்பட்டு, புத்தகங்கள் முன்கூட்டியே விரைவாக அச்சிடப்படும். சாகித்ய அகாடெமி தயார் செய்யும் தெலுங்கு பாடங்களை மட்டுமே பள்ளிகள் நடத்த வேண்டும். இதை அரசு கடுமையாக கடைபிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

துணைஜனாதிபதி வரவேற்பு...

பள்ளிகளில் 12-ம் வகுப்பு வரை தெலுங்கு மொழி கட்டாயம் கற்பிக்க வேண்டும் என்ற உத்தரவை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வரவேற்றுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “ தெலங்கானா அரசின் உத்தரவை நான் வரவேற்கிறேன். 12-ம் வகுப்பு வரை தெலுங்கு மொழி கற்பிக்கப்படுவது கட்டாயம் என்பது நல்ல முடிவு.

தாய்மொழியை வளர்க்க மாநில அரசுகள் அதிக நடவடிக்கைகள் எடுக்கும் என நம்புகிறேன்.தெலங்கானா அரசின்செயலைப் பார்த்து மற்ற மாநிலங்களும் தங்களின் தாய்மொழிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இதைப் பார்த்து, ஆந்திர அரசும் விரைவாக இதேபோன்ற முடிவை எடுக்க வேண்டும்’’ என்றார். 

காங்கிரஸ் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சுதாகர் ரெட்டியும் தெலங்கானாஅரசின் உத்தரவை வரவேற்றுள்ளார்.