இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4500ஐ நெருங்கிவிட்டது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், சமூக தொற்றாக பரவுவதை தடுக்க, வரும் 14ம் தேதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

ஊரடங்கு முடிவுக்கு வர இன்னும் குறைவான நாட்களே உள்ள நிலையில், கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்த பாடில்லை. அதனால் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா அல்லது வாபஸ் பெறப்படுமா என்பது நாட்டு மக்களின் பெரிய சந்தேகமாகவுள்ளது. ஆனால் இதுகுறித்து மத்திய அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை. 

இந்தியாவை பொறுத்தமட்டில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா(781) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. தமிழ்நாட்டில் 621 பேரும் டெல்லியில் 523 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களுக்கு அடுத்தபடியாக தெலுங்கானா மாநிலமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

தெலுங்கானாவால் 378 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில், ஏப்ரல் 14க்கு பிறகு மத்திய அரசு ஊரடங்கை வாபஸ் பெற்றாலும் அதன்பின்னர் 2 வாரங்கள் வரை தெலுங்கானாவில் ஊரடங்கு நீடிக்கும் என்று சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 14ம் தேதி வரை நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. அதன்பின்னர் என்ன என்ற அப்டேட்டை மத்திய அரசு விரைவில் தெரிவிக்கும். இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய தெலுங்கானா மாநில முதல்வர், மத்திய அரசு ஏப்ரல் 14க்கு பிறகு ஊரடங்கை வாபஸ் பெற்றாலும் தெலுங்கானாவில் அதன்பின்னர் 2 வாரங்கள் வரை ஊரடங்கு நீடிக்கும் என தெரிவித்தார்.