தெலங்கானாவில் அரசு பேருந்து மலைப்பாதையில் உருண்டு கவிழ்ந்த விபத்தில் 52 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண தொகையை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. தெலங்கானா மாநிலம், குண்டகட்டா மலைப்பாதையில்  50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து இன்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, மலைப்பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்தது.

 

இந்த விபத்தில் 42 பயணிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 10-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.  உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மீட்பு படை, பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பேருந்து விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் கிராம மக்களும், அரசு அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்று தெலங்கான முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.