புதுமண தம்பதிகளுக்கு ரூ.1.60 லட்சம் நிதி: தெலங்கானாவில் சிறுபான்மையின வாக்குகளை குறி வைக்கும் காங்கிரஸ்!
ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மையின புதுமண தம்பதிகளுக்கு ரூ.1.60 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தெலங்கானாவில் காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது
மொத்தம் 119 தொகுதிகள் கொண்ட தெலங்கானா மாநில சட்டப்பேரவைக்கு நவம்பர் 30ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றைய தினமே அறிவிக்கப்படவுள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அம்மாநில தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பாரத் ராஷ்டிர சமிதி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது. அதேசமயம், காங்கிரஸ் கட்சிக்கு இந்த முறை வாய்ப்பு அதிகம் உள்ளதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன.
அதற்கு ஏற்றாற்போல், திருமணத்தின் போது தகுதியான பெண்களுக்கு பத்து கிராம் தங்கம், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் மாணவர்களுக்கு இலவச இண்டர்னெட் வசதி, மகாலட்சுமி உத்தரவாத திட்டத்தின் கீழ், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 நிதியுதவி, ரூ.500 க்கு எல்பிஜி சிலிண்டர், மாநிலம் முழுவதும் அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என பல்வேறு வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அளித்து வருகிறது.
இந்த நிலையில், தெலங்கானா தேர்தலுக்கான சிறுபான்மையினர் பிரகடனத்தை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அதில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அடுத்த 6 மாதங்களில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். அனைத்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் அரசு திட்டங்களில் நியாயமான இடஒதுக்கீடு உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் மற்றும் பிற சிறுபான்மையின புதுமண தம்பதிகளுக்கு ரூ.1,60,000 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனவும் காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.
'இந்திரம்மா இண்ட்லு' திட்டத்தின் கீழ், சிறுபான்மையினருக்கு வீடு கட்டுவதற்கு நிலம் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கம் வழங்குவதாக ஆளும் பிஆர்எஸ் கட்சி கொடுத்த வாக்குறுதிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி இதனை அறிவித்துள்ளது.
கூட்டுறவு தொழிலாளர்களுக்கு போனஸ் - தமிழக அரசு அறிவிப்பு!
மேலும், வேலைவாய்ப்பில்லாமல் இருக்கும் சிறுபான்மையின இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு மானியத்துடன் கடன் வழங்குவதற்காக ஆண்டுதோறும் ரூ.1,000 கோடி வழங்கப்படும் எனவும் காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.
அப்துல் கலாம் தவுஃபா இ தலீம் திட்டத்தின் கீழ் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் இளைஞர்களுக்கு அவர்கள் எம்பில், பிஹெச்டி படித்து முடித்ததும் ரூ.5 லட்சம் நிதியுதவியாக வழங்கப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.
முதுநிலை பட்டப்படிப்பை முடித்தவுடன் மாணவர்களுக்கு கூடுதலாக ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றும் காங்கிரஸ் உறுதியளித்துள்ளது. பட்டப்படிப்பு முடித்தவுடன் ரூ.25,000, இடைநிலை வகுப்புகள் முடித்தவுடன் ரூ.15,000, மெட்ரிகுலேஷன் முடித்தவுடன் ரூ.10,000 வழங்கப்படும் எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
இமாம்கள், காதீம்கள், பாதிரியார்கள் மற்றும் கிரந்திஸ்கள் உள்ளிட்ட அனைத்து மதத்தைச் சேர்ந்த மத போதகர்களுக்கும் ரூ.10,000 - 12,000 வரை கவுரவ ஊதியம் வழங்கப்படும் எனவும், தெலுங்கானா சீக்கிய சிறுபான்மை நிதிக் கழகத்தை நிறுவுவதாகவும், சிறுபான்மை நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதாகவும் கூறியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தின் சுமார் நான்கு கோடி மக்கள் தொகையில், 12.5% முஸ்லிம்கள் உள்ளனர். ஆளும் பிஆர்எஸ் கட்சிக்கு முஸ்லிம் வாக்குகளை பெற அசாதுதீன் ஓவைசி தலைமையிலான அகில இந்திய மஜிலிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் ஆதரவு உள்ள நிலையில், சிறுபான்மையினருக்கான வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அள்ளி வீசியுள்ளது.