துபாயில் நடைபெற்ற விமான கண்காட்சியின் போது, இந்திய விமானப்படையின் தேஜஸ் போர் விமானம் சாகச நிகழ்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தைத் தொடர்ந்து விமானியின் நிலை குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

துபாயில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகின் மிகப்பெரிய விமான கண்காட்சிகளில் ஒன்றான துபாய் ஏர் ஷோ (Dubai Air Show)-வில் கலந்துகொண்ட இந்திய விமானப்படையின் தேஜஸ் (HAL Tejas) போர் விமானம் வான்சாகசத்தின் போது விபத்துக்குள்ளானது.

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) தயாரித்த இந்த இலகு ரக போர் விமானம் (LCA) துபாய் நேரப்படி சுமார் 2:10 மணியளவில் விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் பார்வையாளர்கள் பார்த்துக்கொண்டிருந்த நிலையில், விமானம் கீழே விழுந்து நொறுங்கி அடர்த்தியான புகை மண்டலம் எழுந்தது.

இந்த விபத்து குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்தியா விமானப்படை, விபத்தில் விமானி வீர மரணம் அடைந்ததாகக் கூறியுள்ளது.

Scroll to load tweet…

தேஜஸ் விமானம்

இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட தேஜஸ் (HAL Tejas) விமானம், ஒரு லேசான, ஒற்றை என்ஜின் கொண்ட போர் விமானமாகும். இது இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்பட்டு வரும் மிக்-21 (MiG-21) போன்ற பழமையான விமானங்களுக்குப் பதிலாக அறிமுகப்படுத்தப்பட்டது. தேஜஸ் விமானத்தின் முக்கியச் சிறப்பம்சம் அதன் சூப்பர்சானிக் வேகம்தான். இது ஒலியை விட சுமார் 1.8 மடங்கு அதிக வேகத்தில், அதாவது தோராயமாக மணிக்கு 2,205 கிமீ வேகத்தில் பறக்கும் திறன் கொண்டது.

இந்த விமானத்தில் மார்ட்டின்-பேக்கர் (Martin-Baker) 'ஜீரோ-ஜீரோ' வெளியேற்றும் இருக்கை பொருத்தப்பட்டுள்ளது. இது விமானம் அதிவேகமாகச் செல்லும்போது அவசர நிலை ஏற்பட்டால், விமானி பாதுகாப்பாக வெளியேற உதவும் தொழில் நுட்பம் ஆகும்.

2001ஆம் ஆண்டு முதல் தேஜஸ் விமானத்தின் 23 ஆண்டு கால வரலாற்றில் இது இரண்டாவது விபத்தாகும். இதற்கு முன், கடந்த 2024 மார்ச் மாதம் ராஜஸ்தானின் ஜெய்சல்மேரில் நடந்த விபத்தில் விமானி பாதுகாப்பாக வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.