போதையில் சட்டையை கிழித்துக் கொண்ட பெண், வீட்டு வாட்ச்மேனை தாக்கிய வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது. 

மும்பையில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்தேரி மேற்கில் உள்ள லோகண்ட்வாலா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் மேகா சர்மா. மாடலிங் மற்றும் கன்டன்ட் ரைட்டிங் வேலை செய்யும் இவர், தனது ஃபிளாட்டில் கடந்த அக்டோபர் 25ம் தேதி இரவு மது அருந்தியுள்ளார். 

போதை தலைக்கேறிய நிலையில், நள்ளிரவு நேரத்தில், தனது வீட்டு வாட்ச்மேன் அலோக் ஃபோன் செய்துள்ளார். அவரிடம், சிகரெட் வாங்கி வந்து தரும்படி, அவர் கேட்டுள்ளார். இதற்கு, வாட்ச்மேன் மறுப்பு தெரிவித்துள்ளார். 

ஆனால், போதையில் என்ன செய்கிறோம் எனத் தெரியாத சூழலில், மேகா சர்மா, வீட்டில் இருந்து இறங்கி, தரைத்தளத்திற்கு வந்துள்ளார். அங்கு பணியில் இருந்த வாட்ச்மேன் அலோக்கிடம், என் பேச்சை கேட்காமல், இருக்க உனக்கு எவ்ளோ திமிர் என்றபடி, வம்பிழுக்க ஆரம்பித்துள்ளார். 

வாட்ச்மேன், நள்ளிரவு நேரத்தில் கடைகள் எதுவும் இருக்காது எனக் கூறவே, ஒரு கட்டத்தில், மேகா சர்மா, ஆத்திரம் அடைந்துள்ளார். உடனடியாக, வாட்ச்மேனை அசிங்க அசிங்கமா திட்டியபடி, அடித்துள்ளார். 

வாட்ச்மேனை அடித்த கையோடு, அங்கிருந்து கிளம்பி, உடனே அவசர போலீஸ் உதவி மையத்திற்கு ஃபோன் செய்துள்ளார். என்ன பிரச்னை என்று தெரியாமல், அவசர அவசரமாக ஓஸிவாரா பகுதி போலீசார் அங்கு விரைந்து வந்துள்ளனர். 

அங்கு வந்து பார்த்தால், ஃபுல் போதையில் இருந்த மேகா சர்மா, சரியான பதில் சொல்லாமல், போலீசாரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். தனது புகாரை, உடனடியாக ஏற்கும்படி அவர் வலியுறுத்தியுள்ளார். ஆனா, பிரச்னை பற்றி முழுதாக விவரம் தெரியாத காரணத்தால், அவரை போலீஸ் நிலையத்திற்கு வந்து பிரச்னையை விவரித்துவிட்டு, புகார் தரும்படி, போலீசார், மேகாவிடம் அறிவுறுத்தியுள்ளனர். 

ஆனால், பிரச்னையின் தீவிரத்தை புரிந்துகொள்ளாத மேகா சர்மா, போலீசாரிடமும் வாக்குவாதம் செய்ய தொடங்கியுள்ளார். அப்போது நேரம் விடியற்காலை 3 மணி ஆகும். 

இந்த நேரத்தில், ஒரு பெண்ணை எப்படி போலீஸ் நிலையத்திற்கு கூப்பிடலாம் என்று, அவர் வாக்குவாதம் செய்ததோடு, இதுபற்றி ஃபேஸ்புக், ட்விட்டரிலும் பதிவிட்டு, நீதி கோரியுள்ளார். 

போலீஸ் நிலையத்திற்கு, பெண் காவலர் இல்லாமல், தான் வர முடியாது என்றும், இரவு 7 மணிக்கு மேல் பெண்களை, போலீஸ் நிலையத்திற்கு கூப்பிடக்கூடாது என்றும், அவர் பிரச்னை செய்துள்ளார். 

பிரச்னை இப்படியே நீண்ட நிலையில், ஒரு கட்டத்தில் போதையில் தன்னை காப்பாற்றிக் கொள்ளும் நோக்கில், மேகா சர்மா, தனது உடைகளை கிழித்துக் கொண்டு கூச்சலிட்டுள்ளார். மேலும், அங்கிருந்த மற்றொரு வாட்ச்மேன் உஸ்மானையும் தாக்கியுள்ளார். 

வேறு வழியின்றி குழம்பி போன போலீசார் அவரை அமைதிபடுத்திவிட்டு, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். 

பின்னர், உள்ளூர் போலீஸ் தன்னிடம் அத்துமீறியதாகவும், நள்ளிரவு நேரத்தில் போலீஸ் நிலையத்திற்கு வரும்படி, தொல்லை கொடுத்ததாகவும் கூறி, நியாயம் கேட்டு, மேகா சர்மா, ஃபேஸ்புக், ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். அதற்கு பதில் அளித்துள்ள மும்பை போலீசார், சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்திற்கு நேரில் சென்று புகார் அளிக்கும்படி அறிவுறுத்தினர். 

இதையடுத்து, நேற்று சனிக்கிழமை ஓஸிவாரா போலீஸ் நிலையத்திற்குச் சென்ற மேகா சர்மா தனது புகாரை பதிவு செய்துள்ளார். இதுபற்றி விரிவாக விசாரித்து வருவதாக, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 

 இதற்கிடையே, மேகா சர்மா, போலீசாரிடம் வாக்குவாதம் செய்தபடி, தனது உடையை கிழித்துக் கொள்வதும், பின்னர் வாட்ச்மேனை தாக்குவதும் போன்ற சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் தற்போது வைரலாக, பரவ தொடங்கியுள்ளது.