மக்களுக்கு சேவை செய்யாவிட்டால் எனது மகனின் உடைகளை கிழித்து விடுங்கள் என மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் அதிரடியாக தெரிவித்துள்ளார். 

மத்தியப் பிரதேச மாநில முதல்வர் கமல்நாத். இவருடைய மகன் நகுல். இம்முறை சிந்த்வாரா மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக முதல் முறையாக அரசியல் களத்தில் அடியெடுத்து வைக்கிறார். இங்கு வரும் 29-ம் தேதி தேர்தல் நடக்கிறது. அதே நேரத்தில், சிந்த்வாரா சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் கமல்நாத் போட்டியிடுகிறார்.

சிந்த்வாரா மக்களவை தொகுதியில் 9 முறை வெற்றி பெற்று எம்.பி.யாக சாதனை படைத்தவர் கமல்நாத். தற்போது, பலமிக்க தனது தொகுதியை மகனுக்காக தாரை வார்த்துள்ளார். இந்நிலையில் தேர்தல் பிரசாரத்தின் போது மகனை ஆதரித்து பேசிய முதல்வர் கமல்நாத், மக்களுக்கு சேவை செய்யாவிட்டால் எனது மகனின் உடைகளை கிழித்து விடுங்கள் என தெரிவித்தார். 

மேலும் அவர் பேசுகையில் 40 ஆண்டு காலமாக இணைந்து பணியாற்றி வருகிறேன். நீங்கள் கொடுத்த அன்பும், வலிமையும்தான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தி இருக்கிறது. உங்களுக்கு சேவையாற்ற அவர் வருவார். அதற்கான பொறுப்பை நான் அவரிடம் கொடுத்துள்ளேன். 

ஒருவேளை, அவர் தொகுதிக்காக உழைக்கத் தவறினால், சொன்னதை செய்யாமல் போனால், நகுலின் சட்டையை கிழித்து நிக்க வைச்சு கேள்வி கேளுங்கள். அந்த வேலையை உங்களுக்கு தருகிறேன். கடந்த தேர்தலில் பிரதமர் மோடி கலர் கலராக பொய்களை அள்ளி வீசினார். சாமானியர்களுக்கு நல்ல நாள் வரும் என்று கூறினார். ஆனால், அவரோட நாட்கள் தான் விரைவில் முடிய போகிறது என முதல்வர் கமல்நாத் கூறியுள்ளார்.