ஆசிரியர், டஸ்டரைக் கொண்டு மாணவன் தாக்கியதில் கோமா நிலைக்கு தள்ளப்பட்டுள்ள சம்பவம் ஐதராபாத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள ராஜ்தானி பள்ளியில் சுரேஷ் குமார் என்ற மாணவன் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார் சுரேஷ்குமார், கடந்த சில நாட்களுக்கு முன்பு லீவு எடுத்துள்ளார். இதனால், பள்ளி ஆசிரியை, சுரேஷ்குமாருக்கு 100 ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.
ஆனால், ஆசிரியை கூறிய அபராத தொகையினை மாணவன் சுரேஷ் குமார் கட்டவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை, டஸ்ட்டரைக் கொண்டு சுரேஷ் மீது வீசியுள்ளார். தலையில் பலத்த காயம் அடைந்த சுரேஷ், வகுப்பை விட்டு வெளியே வந்து வாந்தி எடுத்துள்ளான். இதனை அடுத்து சுரேஷ் மயக்கம் அடைந்தான்.
பின்னர், பள்ளி ஆசிரியர்கள் சுரேஷை அருகில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்த்து விட்டனர். மாணவனை சோதித்த மருத்துவர்கள், சுரேசின் மூளையில் ரத்தம் உறைந்துள்ளது என்றும் இதனால் அவன் சுயநினைவை இழந்துள்ளதாக கூறினர். இதனை அடுத்து மாணவன் சுரேஷுக்கு மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாணவன் மீது டஸ்ட்டரை கொண்டு தாக்கியதால் கோமா நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஐதராபாத் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
