ராஜஸ்தான் மாநிலத்தில் டீ கடைக்காரர் ஒருவர் தனது 6 மகள்களின் திருமணத்தில் ரூ.1.5 கோடி வரதட்சணை பணம் கொடுத்து, வருமானவரித் துறையின் வளையத்துக்குள் சிக்கி உள்ளார். வருமானத்துக்கான விளக்கத்தை அளிக்க கோரி டீ கடைக்காரருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் பறந்துள்ளது.

ஜெய்பூர் மாவட்டம், கோத்புட்லி நகர் அருகே கதாவுதா கிராமத்தைச் சேர்ந்தவர் லீலா ராம் குஜ்ஜார். இவர் அந்த கிராமத்தில் சிறிய டீ கடை நடத்தி வருகிறார். இவருக்கு 6 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், இந்த 6 பெண்களுக்கும் கடந்த 4-ந்தேதி திருமணம் செய்து வைத்தார். அந்த திருமணத்தால் இவருக்கு தற்போது பெரிய சிக்கல் நேர்ந்துள்ளது.

திருமணத்தின் போது, தனது 6 மகள்களுக்கும் தலா ஒவ்வொருவருக்கும் எவ்வளவு வரதட்சணை கொடுக்கப் போகிறேன் என்பதை சத்தமாகக்கூறி, மாப்பிள்ளை வீட்டாரிடம் தட்டில் வைத்து லட்சக்கணக்கில் கட்டுக்கட்டாக பணத்தை அளித்துள்ளார். இது ஊரில் உள்ள பெரியவர்கள், தலைவர்கள் முன்னிலையில் நடந்துள்ளது. இந்த திருமணத்தை வீடியோ எடுக்கும் போது, வரதட்சணை கொடுத்ததையையும் வீடியோ எடுத்துள்ளனர். அதன்பின் இந்த வீடியோவை சிலர் சமூகஊடகங்களில் வெளியிட்டதால், அது வைரலாகப் பரவியது.

இதையடுத்து, ஜெய்பூர் சரக வருமானவரித்துறையினர், லீலா ராம் குஜ்ஜாரை அழைத்து வரதட்சணை பணம் கொடுத்தது குறித்து விசாரணை நடத்தி, வருமானத்துக்கான முறையான கணக்குகளைக் கேட்டனர். ஆனால், அதற்கு அவரிடம் முறையான கணக்குகள் இல்லை எனத் தெரிகிறது. இதையடுத்து, அடுத்த வாரத்துக்குள் வருமானத்துக்கான கணக்குகளை காட்ட வேண்டும் எனக்கூறி லீலா ராமுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வருமானவரித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “நாங்கள் வியாழக்கிழமை வரை பொறுத்து இருப்போம். லீலா ராம் தனது வருமானத்துக்கான வரி ரிட்டன்களை தாக்கல் செய்ய வேண்டும். ஒருவேளை கணக்கில் வராத பணத்தில் இருந்து மகள்களுக்கு வரதட்சணை கொடுத்தது தெரியவந்தால், அவர் வருமானவரியும், விசாரணையையும் எதிர்கொள்ள ேவண்டியது இருக்கும்” என்றனர்.

இதனிடையே, லீலா ராம் குஜ்ஜார், தனது இரு மூத்த மகள்களுக்கு மட்டுமே திருமணம் நடத்த பத்திரிகைகள்  அடித்து அனைவருக்கும் கொடுத்துள்ளார். ஆனால், திருமணத்துக்கு வந்தவர்களுக்கு 6 மணப்பெண்கள் இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தனது 4 மைனர் மகள்களுக்கும் திருமணத்தை சத்தமில்லாமல் குஜ்ஜார் நடத்தியுள்ளார். ஆதலால், மைனர் பெண்களுக்கு திருமணம் நடத்தியது தொடர்பாக  போலீசார் விசாரணை நடத்தி குஜ்ஜாரை தேடி வருகின்றனர். ஆனால், லீலா ராம் குஜ்ஜார் தலைமறைவாக உள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.