tamilnadu is the leading corruption state said survey
ஊழல் நிறைந்த மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதோடு ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளும் மிகக்குறைவாகவே உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
சிஎம்ஸ்-இந்தியா நிறுவனம், ”ஊழல் ஆய்வு 2018” என்ற பெயரில் பல மாநிலங்களில் ஆய்வு நடத்தி உள்ளது. அந்த ஆய்வறிக்கை கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
இந்த ஆய்வு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிஎம்எஸ்-இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த அலோக் ஸ்ரீவஸ்தவா, நாடு முழுவதும் பல மாநிலங்களில் அரசு சேவைகளை பொதுமக்கள் பெறுவதில் உள்ள ஊழல் பிரச்னைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இது 12வது சுற்று ஆய்வாகும். அதன் அடிப்படையில் மாநிலங்கள் அட்டவணைப்படுத்தப்பட்டன.
அதில், அரசு சேவைகளைப் பெறுவதில் லஞ்சம் பெறுவது தமிழ்நாட்டில் அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. ஊழல் பட்டியலில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளது. 2வது இடத்தில் தெலுங்கானாவும் 4வது இடத்தில் ஆந்திராவும் உள்ளன. இந்த மாநிலங்களில் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் மிகக்குறைந்த அளவே உள்ளன. இந்த மாநிலங்களை தவிர பஞ்சாப், குஜராத் மாநிலங்களிலும் ஊழல் தடுப்பு மிக மோசமாகவே உள்ளது. ஊழல் தடுப்பு நடவடிக்கைகளில் ராஜஸ்தான், கர்நாடகா, டெல்லி ஆகிய மாநிலங்கள் ஓரளவு கவனம் செலுத்துகின்றன.
மேலும், மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், பிஹார், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் ஊழலை எதிர்ப்பதில் மக்கள் வேகம்காட்டுகின்றனர். ஆனால், ஆந்திரா, மேற்குவங்கம், கர்நாடகா, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஊழலுக்கு எதிரான பொதுமக்களின் பங்களிப்பு மிகக் குறைவு. இந்த ஆய்வின்போது, கடந்த ஓராண்டில் அரசு சேவைகளைப் பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது என்று தெலங்கானாவில் 73 % குடும்பத்தினர் தெரிவித்தனர்.
மேலும், நாடு முழுவதும் அரசு சேவைகளைப் பெற லஞ்சம் கேட்கும் நிலை அதிகரித்துள்ளது என்று 75% பேர் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக போக்குவரத்து, போலீஸ், வீட்டுவசதி, நில ஆவணங்கள், சுகாதாரம், மருத்துவமனை போன்ற இடங்களில்தான் ஊழல் அதிகமாக நடப்பது தெரியவந்துள்ளது என ஸ்ரீவஸ்தவா கூறியுள்ளார்.
