முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்குமாறு கேரள முதல்வர் விடுத்த தமிழக அரசு நிராகரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில தினங்களாக கனமழை பெய்துவருகிறது. அதனால் கேரளா முழுவதுமே வெள்ளக்காடாக மாறியுள்ளது. மீட்புப்பணிகளும் நிவாரணப்பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. 

கனமழை பெய்துவருவதால், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அதிகாலையில் அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து, உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த அணையின் பராமரிப்புப் பணியை தமிழக அரசு மேற்கொண்டு வருவதால், நீர்மட்டத்தை 139 அடியாக குறைத்து பராமரிக்குமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியிருந்தார்.

ஆனால், இந்த கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக கேரள பொதுப்பணித்துறைச் செயலாளரிடம் தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் விளக்கம் அளித்துள்ளதாகவும் அதில், உச்சநீதிமன்ற உத்தரவின்படி, 142 அடி நீரை தேக்குவதாகவும் அதற்கு மேல் வரும் நீரை அப்படியே வெளியேற்ற உள்ளதாகவும் எஸ்.கே.பிரபாகர் கூறியதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. 

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் கடந்த 2014ம் ஆண்டு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.