வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரளாவிற்கு கூடுதலாக ரூ.5 கோடி நிதி ஒதுக்குவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். 

கேரளாவில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பெய்துவரும் கனமழையால் அம்மாநிலம் முழுவதுமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கேரளா முழுவதுமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. கனமழைக்கு 300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 

2 லட்சத்திற்கும் அதிகமானோர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். கேரளாவிற்கு குடிநீர் தமிழகத்திலிருந்து கொண்டு செல்லப்படுகிறது. தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவம், கடற்படை ஆகிய படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாலும் நிலச்சரிவாலும் போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளது. கேரளாவே ஒட்டுமொத்தமாக ஸ்தம்பித்துள்ளது. மழை வெள்ளத்தினால் பல லட்சம் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.  ரூ.19,512 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கேரள அரசு கணக்கிட்டுள்ளது. 

கேரளாவிற்கு தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல மாநில அரசுகள் நிதியுதவி அளித்துவருகின்றன. கேரளாவிற்கு நேரில் சென்று முதல்வர், ஆளுநர் மற்றும் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி ரூ.500 கோடியை இடைக்கால நிவாரண நிதியாக வழங்க உத்தரவிட்டுள்ளார். 

தமிழக அரசு சார்பில் ஏற்கனவே கேரளாவிற்கு ரூ.5 கோடி நிவாரண நிதி வழங்கப்பட்ட நிலையில், கூடுதலாக மேலும் ரூ.5 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.