தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குமரி ஆனந்தனின் மகளும் மருத்துவருமான தமிழிசை சௌந்தரராஜன், பாஜகவில் மிகச்சிறிய பொறுப்பிலிருந்து படிப்படியாக வளர்ந்து தமிழக பாஜக தலைவரானவர். 2014ம் ஆண்டு முதல் மாநில பாஜக தலைவராக இருந்துவருகிறார். 

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு கனிமொழியிடம் தோற்றார். தமிழிசை சௌந்தரராஜன் பாஜகவில் மிகத்தீவிரமாக உழைத்தும் அவருக்கான அங்கீகாரமும் இடமும் அளிக்கப்படவில்லை என்ற ஆதங்கம் அவரது ஆதரவாளர்களிடம் இருந்துவந்தது. 

நிர்மலா சீதாராமன் மட்டும் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு மத்திய அமைச்சராக்கப்படும்போது, பாஜகவிற்காக கடுமையாக உழைத்து படிப்படியாக உழைத்து உயர்ந்திருக்கக்கூடிய தமிழிசைக்கு அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற கருத்து, மக்களவை தேர்தலுக்கு பின் பரவலாக இருந்தது. 

இந்நிலையில், தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.