உத்தரப் பிரதேசத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கழிவறைகளில் மகாத்மா காந்தியின் படம், தமிழக அரசின் சின்னமும் அடங்கி டைல்ஸ்கள் பதிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் புலந்த்ஷார் என்ற மாவட்டத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. இச்சவா என்ற கிராமத்தில் மத்திய அரசின் நிதி உதவியுடன் கட்டுபட்டுள்ள இந்தக் கழிவறைகளில் பதிக்கப்பட்டுள்ள டைல்ஸ்களில் இந்திய அரசின் சின்னமான அசோகச் சக்கரம், மகாத்மா காந்தி படங்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதேபோல தமிழக அரசின் சின்னமான ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரமும் வாய்மையே வெல்லும் என்ற வாக்கியம் அந்த டைல்ஸ்களில் இடம்பெற்றுள்ளது.


இந்த விவகாரம் வெளியே தெரிந்த பிறகு சர்ச்சையானது. புகாரின் பேரில்  அந்தக் கிராமத்தின் விஏஓ பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இச்சாவா கிராமத்தில் 508 கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் 13 கழிவறைகளில் மட்டுமே இப்படி டைல்ஸ்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டுவருவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

 
தற்போது இந்த விவகாரம் சமூக ஊடங்களிலும் வைரலாகப் பரவி வருகிறது. பலரும் இந்த டைல்ஸ் படங்களை சமூக உடங்களில் பகிர்ந்து கருத்திட்டுவருகிறார்கள். இதற்கு முன்பு, பிரதமர் நரேந்திர மோடி, ம.பி. முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் படங்களுடன் கூடிய டைல்ஸ்கள் கழிவறைகளில் பதிக்கப்பட்டது சர்ச்சையானது. ஆனால், தமிழக அரசின் சின்னம் டைல்ஸ்களில் எப்படி பதிவு செய்யப்பட்டன என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.