உக்ரைனின் போர் பகுதியிலில் சிக்கியுள்ள 35 தமிழக மாணவர்கள், அண்டை நாட்டிற்கு வருவதற்கான பேருந்து கட்டணம் சுமார் ரூ .14 லட்சத்தை தமிழ்நாடு அரசே செலுத்தியுள்ளது. 

ரஷ்யா உக்ரைன் மீது போர் தாக்குதல் தொடங்கியுள்ள நிலையில், அங்குள்ள மக்கள் தங்களது உயிரை காப்பாற்றிக்கொள்ள, அண்டை நாடுகளுக்கு படையெடுத்துள்ளனர். போலந்து, ஹங்கேரி, ஸ்லோவாகியா, ரூமெனியா உள்ளிட்ட நாடுகளில் மக்கள் தஞ்சமடைந்து வருகின்றனர். இதனால் எல்லைகளில் உக்ரைனில் இருந்து வரும் மக்களுக்காக முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் போர் தொடங்கிய 10 நாட்களில் சுமார் 10 லட்சம் மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். 

இதனிடையே கல்வி மற்றும் வேலை நிமித்தமாக உக்ரைனில் தஞ்சமடைந்த சுமார் 20,000 இந்தியர்கள் இராணுவ தாக்குதலினால் அங்கு சிக்கியுள்ளனர். அவரகளை மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ஆபரேஷன் கங்கா எனும் பெயரில் இந்தியர்களை தாயகம் அழைத்துவரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன். அதன்படி, உக்ரைனில் போர் காரணமாக, வான் வழி பயணம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் உக்ரைனிலிருந்து அண்டை நாடுகளின் எல்லைகளுக்கு தரை வழியாக இந்திய மாணவர்கள் அழைத்து வரப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்நிலையில் இதுவரை 69 விமானங்களில் 13,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதனிடையே உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை விரைவாக மீட்டு வருவதற்காக அந்த நாடுகளுக்கு செல்லவும், அங்குள்ள இந்திய துாதரகங்களுடன் இணைந்து செயல்படவும் சிறப்பு குழு உருவாக்கப்பட்டது. இந்த குழுவில் திமுக எம்.பி.க்கள் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி, எம்.எம்.அப்துல்லா, எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களுடன் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதுல்யா மிஸ்ரா, ஏ.கே.கமல் கிஷோர், எம்.பிரதீப் குமார், அஜய் யாதவ், கோவிந்த ராவ் மற்றும் ஜெசிந்தா லாசரஸ் ஆகியோர் செல்கின்றனர். இந்நிலையில், இந்த குழு டெல்லியில் இன்று வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கரை சந்தித்து, தமிழக மாணவர்களை மீட்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.எம்.பி திருச்சி சிவா மற்றும் ஐஏஎஸ் அதிகாரி ஏ.கே.கமல் கிஷோர் ஆகிய இருவர் ஸ்லோவாகியா நாட்டிற்கும்,எம்.பி கலாநிதி வீராசாமி, ஐஏஎஸ் அதிகாரி எம்.பிரதீப் குமார் ஆகியோர் ஹங்கேரி நாட்டிற்கும், எம்.பி எம்.எம்.அப்துல்லா, ஐஏஎஸ் அதிகாரி அஜய் யாதவ் ஆகியோர் ருமேனியா நாட்டிற்கும் எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா அவருடன் ஐஏஎஸ் அதிகாரி எம்.கோவிந்தராவ் ஆகிய இருவரும் போலந்து நாட்டிற்கும் சென்றுள்ளனர்.

உக்ரைனில் அண்டை நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் அவர்களது தொடர்புகளை பயன்படுத்தி இன்று 35 மாணவர்களுக்கு உக்ரைனின் போர் பகுதியில் இருந்து அண்டை நாட்டிற்கு வருவதற்கான பேருந்து கட்டணம் ரூ .14 லட்சம் தமிழ்நாடு அரசே செலுத்தியது. மேலும் இன்று டெல்லியில் இருந்து சென்னை திரும்புவதற்கு தனி விமானத்தை அமர்த்தி உடனடியாக மாணவர்கள் வரவழைக்கப்பட்டனர். உக்ரைனில் தமிழக மாணவர்கள் மீட்பதற்கான சிறப்பு குழு இதில் சிறப்பு தொடர் கவனம் செலுத்தி பணியினை விரைவுபடுத்திக் கொண்டிருக்கிறது. இப்பணிக்கு என்று இதுவரையில் மூன்றரை கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் தமிழர் நல ஆணையத்தின் நிதியை பயன்படுத்தி உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை விரைவு படுத்துமாறு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

"

உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட தமிழக மாணவர்கள் 181 பேர் தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.அவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார். சென்னை விமான நிலையம் வந்த மாணவர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு அரசு செலவில் அனுப்பி வைக்கப்பட்டனர்.